'ஓடும் மலை ரயிலில் செல்பி எடுக்க கூடாது' ரயில்வே பாதுகாப்பு படை விழிப்புணர்வு
'ஓடும் மலை ரயிலில் செல்பி எடுக்க கூடாது' ரயில்வே பாதுகாப்பு படை விழிப்புணர்வு
ADDED : செப் 26, 2026 03:34 AM

குன்னுார்: குன்னுார் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் சார்பில், சுற்றுலா வந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் ரயில் நிலையத்தில், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை ஆணையரின் உத்தரவின்பேரில், 'ஜன் ஜாக்ரன்' விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு மலை ரயிலில் சுற்றுலா வந்த, மன்னார்குடி ஆருத்ரா இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த, 46 மாணவ, மாணவிகள் மற்றும் 12 ஆசிரியர்களுக்கு, குன்னுாரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அதில், ரயில்வே பாதுகாப்பு படை எஸ்.ஐ., ஜீவராஜ் பேசுகையில், ''நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. ஓடும் ரயிலில் ஆபத்தை ஏற்படுத்தும் செல்பி எடுக்க கூடாது. முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து தின்பண்டங்கள் மற்றும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது. ரயில் அல்லது ரயில் நிலையத்தில் உரிமை கோரப்படாத மர்ம பொருட்கள் கிடந்தால் அதை தொடாமல் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவசர உதவிக்கு, 139 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்,''என்றார்.
ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., ருக்மணி பேசும்போது, ''குழந்தை கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள், ரயில்களில் பிக்பாக்கெட் அடித்தல், நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
