/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் மழை, குளிர் வாட்டுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! காய்ச்சல் வந்தால் உடனடி பரிசோதனை அவசியம்
/
மலையில் மழை, குளிர் வாட்டுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! காய்ச்சல் வந்தால் உடனடி பரிசோதனை அவசியம்
மலையில் மழை, குளிர் வாட்டுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! காய்ச்சல் வந்தால் உடனடி பரிசோதனை அவசியம்
மலையில் மழை, குளிர் வாட்டுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! காய்ச்சல் வந்தால் உடனடி பரிசோதனை அவசியம்
ADDED : ஜூலை 30, 2025 08:36 PM

ஊட்டி; மாவட்டம் முழுவதும் மழையுடன் குளிர் வாட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் மே மாதம் இறுதியில் பருவமழை துவங்கியது. அதில், ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது மழை சற்று குறைந்தாலும் பெரும்பாலான நாட்கள் மழை பெய்து வருகிறது.
இம்மாவட்டத்தை பொறுத்தவரை மலை காய்கறி, தேயிலை விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளுக்கு அதிகாலையில் செல்லும் தோட்ட தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
10 டிகிரி செல்சியஸ் ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில், அதிகாலை குளிர், பகல் நேரத்தில் கடும் மேகமூட்டம் தென்படுவதால், ரெயின்கோட், வெம்மை ஆடைகளை அணிந்து கொண்டு கடும் சிரமத்திற்கு இடையே பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு மக்ககள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை, 16 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம், 10 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதனால், காலை நேர குளிர் இரவு வரை தொடர்கிறது. குழந்தைகள் காலை, மாலை நேரங்களில் சிரமத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
தீ மூட்டி குளிரை போக்குகிறோம் தொழிலாளர்கள் கூறுகையில்,'கடந்த இரண்டு மாதங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மழை குறைந்தாலும் குளிர் வாட்டி எடுக்கிறது. அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. மதியம் ஆனாலே, குளிரை தாக்குபிடிக்க தீ மூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இது போன்ற காலநிலையால் தொழிலாளர்கள் வேலை செல்ல முடியாமல், ஜலதோஷம், காய்ச்சலால் அவதி அடைந்து வருவதால், குடும்பத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது,'என்றனர்.
ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில், ''மழை காற்று என, காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் கடுங்குளிர் நிலவுகிறது.
இது போன்ற சீதோஷ்ண நிலை சளி, இருமல், காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. அவ்வாறு உடல் நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக, பெற்றோர் குழந்தைகளுக்கு போதிய கவனம் செலுத்த வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். பள்ளியிலும் மாணவ, மாணவியரை கவனமுடன் இருக்க நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும்.
மாவட்ட முழுவதும் இது குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதால், காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று பயனடைய வேண்டும்,'' என்றார்.

