/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராமங்களில் ராமர் பஜனை ஊர்வலம் நிறைவு
/
கிராமங்களில் ராமர் பஜனை ஊர்வலம் நிறைவு
ADDED : ஜன 16, 2025 10:46 PM

கூடலுார், ; கூடலுார் கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு ராமர் பஜனை ஊர்வலம் நிறைவு விழா சிறப்பாக நடந்தது.
கூடலுார், பந்தலுார் பகுதிகளில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்கள், ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் ராமர் பஜனை நடத்தி வருகின்றனர்.
கிராம கோவில்களில் இருந்து இளைஞர்கள், தினமும், அதிகாலை ராமர் விளக்கு ஏற்றி அதனை வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜை செய்து, சூரிய உதயத்துக்கு முன் கோவிலுக்கு கொண்டு வருவர். தை, 1ம் தேதி, பொங்கல் விழாவில் நிறைவு நிகழ்ச்சிகள் நடக்கும்.
இந்நிலையில், நடப்பாண்டு, கூடலுாரின் பல கிராம பகுதிகளில் மார்கழி, 1ம் தேதி ராமர் பஜனை ஊர்வலம் துவங்கியது. பொங்கல் விழாவை முன்னிட்டு இதன் நிறைவு விழா நடந்தது. அதில், கம்பம் விளக்கு ஏற்றி செல்ல அலங்கரிக்கப்பட்ட தேரில் படத்துக்கு மாலை அணிவித்து அலங்கரித்து ஊர்வலமாக கிராமங்களுக்கு எடுத்து சென்று பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜையுடன் விழா நிறைவு பெற்றது.
மக்கள் கூறுகையில், 'இந்த விழாவில் பங்கெடுக்க கூடிய இளைஞர்கள், பஜனை முடியும் காலம் வரை அசைவ உணவை தவிர்த்து, கோவில் அல்லது தனி அறையில் தங்கி ஊர்வலத்தில் பங்கேற்று வருகின்றனர்.
சூரிய உதயத்திற்கு முன், ராமர் பஜனை விளக்கில் விழிப்பது பெண்களுக்கு நல்லது என்பதால், ராமர் பஜனை ஊர்வலத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்,'என்றனர்.