/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஹிரோஷிமா நாகசாகி தின கருத்தரங்கில் அரிய தகவல்
/
ஹிரோஷிமா நாகசாகி தின கருத்தரங்கில் அரிய தகவல்
ADDED : ஆக 08, 2025 08:27 PM

கோத்தகிரி; தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கரிக்கையூர் பழங்குடியினர் பள்ளியில், ஹிரோஷிமா நாகசாகி தின கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:
கடந்த, 1945ம் ஆண்டு, இரண்டாம் உலக போர் முடியும் தருவாயில் ஜப்பான் தோற்றுப்போன நிலையில் இருந்தது. போரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, ஜப்பானியர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அதே ஆண்டு ஆக., 6ம் தேதி, ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது 'லிட்டில் பாய்' எனப்படும் அணுகுண்டையும்; 9ம் தேதி, நாகசாகி நகரத்தின் மீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை வீசியது.
இந்த குண்டு வீச்சில், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மனித குல வரலாற்றில் இந்த நிகழ்ச்சி, மிகப்பெரிய பேரழிவாக இருந்தது. அந்த அணுகுண்டை கண்டுபிடித்த உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பின்னாளில், 'இந்த அணுகுண்டை ஏன் கண்டுப்பிடித்தோம்,' என, வருந்தினார்.
100 கி.மீ., சுற்றளவில் பேரழிவு தற்போது, இந்திய மற்றும் பாகிஸ்தான் உட்பட, பெரும்பாலான நாடுகளில், இந்த பூமியை, 400 முறை அழிக்கக் கூடிய அளவிற்கு அணுகுண்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய அணு குண்டுகளை, அன்றைய அணுகுண்டுகளோடு ஒப்பிடும் போது, ஜப்பானில் போடப்பட்ட அணுகுண்டுகளை விட தீவிரமானது. ஒரு அணுகுண்டு விமானத்தில் இருந்து, ஒரு குறிப்பிட்ட பகுதியில் வீசப்படும் போது, அந்த குண்டு வெடிக்க துவங்கும் தருணத்தில், சுமார், 100 கி.மீ., துாரத்திற்கு காற்று முழுவதையும் வெளியேற்றிவிடும்.
அப்போது, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக, வெளியில் இருந்து வேகமாக காற்று அந்த பகுதியில் நுழையும் போது, உயரமான கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகிவிடும். குண்டு தரையில் விழும் போது, 10 ஆயிரம் டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உருவாகும்.
புற்றுநோய் ஏற்படும் இந்த வெப்பநிலை, சூரியனின் மைய பகுதியில் உள்ள வெப்பநிலைக்கு சமமாகும். அப்போது, 13 கி.மீ., பரப்பளவில் உள்ள அனைத்து உலோகங்களும், ஆறுகளும் அப்படியே ஆவி ஆகிவிடும்.
அப்போது, அணுகுண்டு, ஒரு நாய் குடை காளான் வடிவத்தில் மேல் நோக்கி விரியும். அந்த நேரத்தில், 100 கி.மீ., சுற்றளவில் பேரழிவு உண்டாக்கக்கூடிய கதிர்வீச்சு பரவும். இந்த பகுதியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களும் புற்றுநோயால் பாதிக்கப்படும். இன்றைய அணுகுண்டுகள் அனைத்தும், கம்ப்யூட்டர்களால் இயக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மனிதர்கள் 'போர் வேண்டாம்,' என்ற மனநிலையில் உறுதியாக இருந்தால் மட்டுமே உலகை காக்க முடியும். இவ்வாறு, அவர் பேசினார். ஆசிரியர் குமார் வரவேற்றார். ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

