பழங்குடியின கிராமத்தில் ரேஷன் கார்டு திருத்த பணி
பழங்குடியின கிராமத்தில் ரேஷன் கார்டு திருத்த பணி
ADDED : பிப் 28, 2026 05:51 AM

பந்தலுார்: பந்தலுார் சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் வழங்கல் துறையினர் நேரில் சென்று ரேஷன் கார்டுகளுக்கான திருத்தங்களை செய்து கொடுத்தனர்.
பந்தலுார் சுற்று வட்டார பகுதி பழங்குடியின கிராமங்கள், வனப்பகுதியை ஒட்டியும், தொலை துாரத்திலும் அமைந்துள்ளன.
இங்குள்ள மக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு, அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்வதில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பந்தலுார் வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையிலான குழுவினர், பழங்குடியினர் கிராமங்களுக்கு நேரில் சென்று, ரேஷன் கார்டுகளில் திருத்தம் மற்றும் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை 'ஆன்லைன்' வாயிலாக உடனுக்குடன் செய்து கொடுத்தனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், வயோதிகர், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் பொருட்களை நேரில் கொண்டு சென்று வழங்கவும் ரேஷன் கடை ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.
பழங்குடி மக்கள் கூறுகையில், ' வட்ட வழங்கல் அதிகாரிகள் நேரில் வந்து ரேஷன் கார்டு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,' என்றனர்.
