/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் பஸ்களை குறைத்ததால் நாள்தோறும்... தொடரும் தகராறு? 'பீக் ஹவர்' பிரச்னைகளை களைய நடவடிக்கை தேவை
/
நீலகிரியில் பஸ்களை குறைத்ததால் நாள்தோறும்... தொடரும் தகராறு? 'பீக் ஹவர்' பிரச்னைகளை களைய நடவடிக்கை தேவை
நீலகிரியில் பஸ்களை குறைத்ததால் நாள்தோறும்... தொடரும் தகராறு? 'பீக் ஹவர்' பிரச்னைகளை களைய நடவடிக்கை தேவை
நீலகிரியில் பஸ்களை குறைத்ததால் நாள்தோறும்... தொடரும் தகராறு? 'பீக் ஹவர்' பிரச்னைகளை களைய நடவடிக்கை தேவை
ADDED : பிப் 19, 2025 09:53 PM
ஊட்டி ; நீலகிரியில் இயங்கும் அரசு பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், காலை; மாலை கூட்டம் அதிகரிக்கும் நேரங்களில் பயணிகள், போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் ஏற்படும் பிரச்னைகள் அதிகரித்து வருகிறது; இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகம் ஊட்டி மண்டலத்தின் கீழ், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் போக்குவரத்து பணிமனையின் கீழ், உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலம் என, 270 வழித்தடத்தில், 300 அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும், 1.30 லட்சம் பயணியர் அரசு பஸ்களை பயன்படுத்துகின்றனர். இதில், சமீப காலமாக கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டத்திற்கான, 40 வழித்தடங்களில் பஸ்கள் குறைக்கப்பட்டன.
பயணிகள் அதிருப்தி
நீலகிரியை பொறுத்தவரை தோட்ட தொழிலாளர்கள்; மாணவ, மாணவிகள் உட்பட பிற மக்கள் அரசு பஸ்களை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். பஸ்கள் குறைப்பு காரணமாக, பெரும்பாலான வழித்தடத்தில் காலை; மாலை நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். பல பஸ் நிறுத்தத்தில் பயணிகள் ஏறி, இறங்கும் போது பயணிகள் தடுமாறி விழும் அபாயம் நிலை உள்ளது.
அந்த நேரத்தில் பல பகுதிகளில், நடத்துனர்கள்; பயணிகளுக்கும் தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அதில், ஒரு சில நடத்துனர்கள், பயணிகளிடம் கனிவு காட்டாமல் செயல்படுவது பயணிகளை அதிருப்தி அடைய செய்கிறது.
'இது போன்ற புகார்களை பயணிகள் போக்குவரத்து கழக உயரதிகாரிகளிடம் தெரிவித்தாலும் உரிய முறையில் நடவடிக்கை எடுப்பதில்லை,' என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஊட்டி, குன்னுார், கூடலுார் கிராம பகுதி பஸ்களில் இது போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.
பராமரிப்பிலும் குறைபாடு
மேலும், அரசு பஸ்களில் கட்டாயமாக முதலுதவி பெட்டி வைக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அவசர தேவைக்கு பயணிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்களில் முதலுதவி பெட்டி இல்லை. அரசு பஸ்களுக்கான வாராந்திர பராமரிப்பு பணி மேற்கொள்வது குறித்து, பஸ்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், அதற்கான பணிகள் முறையாக நடப்பதில்லை. வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் பழுதானால் போதிய உதிரி பாகங்கள் இல்லாமல் திணறும் நிலை தொடர்கிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகள் கூறுகையில், 'சில பஸ்களில் 'பாடி' மட்டும் வர்ணம் பூசப்பட்டு புதியது போன்று காணப்படுகிறது. மற்றபடி இன்ஜின், டயர் ஆகியவை புதியதாக இல்லை. மலை மாவட்டத்தின் முக்கியத்துவத்தை கருதி, மாநில அரசு இந்த மாவட்டத்துக்கு கூடுதலாக புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைக்கப்பட்ட கிராம வழித்தடத்தில் மீண்டும் பஸ்களை இயக்க வேண்டும். பஸ்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கும் வகையில், அதிகாரிகளின் மொபைல் எண்களை பஸ்களில் எழுத வேண்டும்,' என்றனர்.