/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
யானை தாக்கி மூதாட்டி பலி உறவினர்கள் சாலை மறியல்
/
யானை தாக்கி மூதாட்டி பலி உறவினர்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 23, 2025 02:12 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே டான்டீ தேயிலை தோட்ட குடியிருப்பு வாசலில் யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நெல்லியாளம் டான்டீ சரக எண்-4-ஐ சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி, 65; எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் குடியிருந்த இவர், நேற்று காலை, 7:00 -மணிக்கு வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.
அப்போது, வீட்டு வாசலுக்கு வந்த கொம்பன் யானை அவரை துரத்தி மிதித்துக் கொன்றது. தொடர்ந்து, யானை தேயிலை தோட்டம் வழியாக அருகில் உள்ள புதர்பகுதிக்கு சென்றது. சம்பவ இடத்திற்கு தேவாலா டி.எஸ்.பி., ஜெயபாலன், வனச்சரகர்கள் ரவி உள்ளிட்டோர் வந்து, மூதாட்டி உடலை பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், 'யானை மற்றும் வன விலங்குகளிடமிருந்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்' என, வலியுறுத்தி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசீலன் தலைமையில், கொளப்பள்ளி பஜாரில், காலை, 9:30 மணி முதல் மறியல் நடந்தது. வியாபாரிகளும் கடைகளை அடைத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
தாசில்தார் சிராஜூநிஷா, 'டான்டீ' கோட்ட மேலாளர் சிவகுமார், டி.எஸ்.பி., ஜெயபாலன், உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால், போராட்டம் கைவிடப்பட்டது.

