UPDATED : அக் 11, 2026 05:28 PM
ADDED : அக் 11, 2026 05:16 PM

குன்னூர்: குன்னூர் – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், மழையின் காரணமாக, நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு, 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்த மலை ரயில் இயக்கம் நேற்று முதல் மீண்டும் துவங்கியது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மலை ரயில் பாதையில் கடந்த, 9 ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டு மேட்டுப்பாளையம்-- – ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினமும் மீண்டும் தொடர் மண் சரிவுகளால் 2வது நாளும் ரத்து நீடித்தது. ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு இவற்றை அகற்றி தண்டவாளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும் சீரமைத்தனர். பணி நிறைவு பெற்ற நிலையில், நேற்று மலை ரயில் சேவை துவங்கியது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு வழக்கம்போல் புறப்பட்ட மலை ரயில், காலை, 10:40 மணிக்கு குன்னூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. தொடர்ந்து, அங்கிருந்து காலை, 11:10 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு, 12:20 மணிக்கு சென்றது.
மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கல்வி சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள் ஊட்டி- குன்னூர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
