விரட்டி... விரட்டி... கடிக்குது! தெருநாய்கள் தொல்லைக்கு என்னதான் தீர்வு
விரட்டி... விரட்டி... கடிக்குது! தெருநாய்கள் தொல்லைக்கு என்னதான் தீர்வு
ADDED : பிப் 28, 2024 09:58 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில், தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நேற்று, மேட்டுப்பாளையம் எஸ்.எம்., நகரில் 3 வயது சிறுமியை தெருநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தெருக்களில், சாலையோரங்களில், தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பலர், நாய்கள் துரத்தி சாலையில் விழுந்து காயம் ஏற்படும் நிலையும் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.
குழந்தைகளை, வீட்டை விட்டு வெளியே அனுப்பவும், பெற்றோருக்கு பயம். நிர்வாகத்தினர் முறையாக, அவசரமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.எம்., நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. நேற்று எஸ்.எம்., நகர் தெருக்களில் சுற்றி திரிந்த நாய் ஒன்று, அவ்வழியாக நடந்து சென்றவர்களை விரட்டி விரட்டி கடிக்க முயன்றது. பலரும் தங்களது கைகளில் கிடைத்த கல், கட்டை என பொருட்களை கொண்டு விரட்டினர்.
அதே பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த, 3 வயது சிறுமி அஸ்மியாவை அந்த தெரு நாய் கடித்தது. இதில் குழந்தையின் இடது கண் அருகில், உதடு, கன்னம் என முகத்தில் காயம் ஏற்பட்டது.
குழந்தைகளின் அலறலை கேட்டு வந்தவர்கள், நாயை விரட்டி, குழந்தையை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நகராட்சி அதிகாரிகள், குன்னுாரில் இருந்து தன்னார்வ அமைப்பினரை வரவழைத்து, நாயை பிடித்து சென்று, ஊசி செலுத்தி கண்காணித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின் கூறுகையில், ''நகர் பகுதிகளில் தெரு நாய்களை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்படும் நாய்களுக்கு வெறி நோய் தொடர்பான ஊசி, கருத்தடை என அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
கடந்த பிப்.,16ம் தேதி, காரமடை அருகே சீளியூர் கிராமத்தில், தெருநாய் ஒன்று, அப்பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவி சிந்துாரா மற்றும் நான்கு வயது பெண் குழந்தை ஸ்ரீநிதி ஆகியோரை கடித்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, இதுபோன்ற சம்பவம் மேட்டுப்பாளையத்தில் நடந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளில், தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. மேட்டுப்பாளையம் தாலுகா முழுவதும் பல்வேறு இடங்களில் தெருநாய்கள் தொல்லை உள்ளன. காலையில் நடைபயிற்சி செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் குழந்தைகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளின் பெற்றோர், மக்கள் என அனைவரும் இதனால் அச்சத்தில் உள்ளனர். இதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
