ADDED : பிப் 28, 2024 09:36 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகரில், அண்ணாஜி ராவ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் நகரில் கோவை, ஊட்டி, அன்னுார், அண்ணாஜிராவ் சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய ஐந்து சாலைகள், நகரின் முக்கிய சாலைகள். வெளியூர்களிலிருந்து இந்த ஐந்து சாலைகள் வழியாக, மேட்டுப்பாளையம் நகருக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. நகரில் அண்ணாஜி ராவ் சாலை ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் செல்லும் அளவுக்கு விரிவாக்கம் செய்து, நெடுஞ்சாலை துறை நிர்வாகத்தினர், தார் சாலை அமைத்துள்ளனர்.
சாலையின் கிழக்குப் பகுதியில், தள்ளுவண்டி வியாபாரிகள், சாலையை ஆக்கிரமிப்பு செய்து பழக்கடைகளையும், காய்கறி கடைகளையும் நிரந்தரமாக அமைத்துள்ளனர். மேற்கு பகுதியில் சிறிய காய்கறி கடைகள் வைத்துள்ளனர். கடை வியாபாரிகள் சாலை வரை, தங்கள் கடைகளை விரிவாக்கம் செய்துள்ளனர்.
இதனால் ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் செல்லும் அளவுக்கு இருந்த சாலை, தற்போது ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால், ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு சாலை உள்ளது. இதனால் காலை மாலை நேரங்களில், இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன.
எனவே நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், அண்ணாஜிராவ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
