/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கலாசாரத்தை பாதுகாக்க மதுவை தவிர்ப்போம் படுகர் சமுதாய கூட்டத்தில் தீர்மானம்
/
கலாசாரத்தை பாதுகாக்க மதுவை தவிர்ப்போம் படுகர் சமுதாய கூட்டத்தில் தீர்மானம்
கலாசாரத்தை பாதுகாக்க மதுவை தவிர்ப்போம் படுகர் சமுதாய கூட்டத்தில் தீர்மானம்
கலாசாரத்தை பாதுகாக்க மதுவை தவிர்ப்போம் படுகர் சமுதாய கூட்டத்தில் தீர்மானம்
ADDED : டிச 09, 2024 05:07 AM

கோத்தகிரி : 'படுகர் கலாசாரத்தை பாதுகாக்க, முன்னோர் பாதையை பின்பற்றி, கிராமங்களில் மதுவை முழுமையாக தவிர்க்க வேண்டும்,' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், 'பொரங்காடு, தொதநாடு, மேற்குநாடு மற்றும் குந்தை சீமை,' என, 350க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில், படுக சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குல தெய்வங்களான ஹெத்தையம்மன் மற்றும் ஹிரியோடைய்யாவை வழிப்படும் சமுதாய மக்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பேணி காப்பதில் அதிக அக்கறை காட்டுகின்றனர்.
அதில், திருவிழா உட்பட, சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்ச்சிகளை சமீப காலமாக ஆடம்பரமாக நடத்துகின்றனர். குலதெய்வம் திருவிழாக்களை தவிர்த்து, இதர நிகழ்வுகளுக்கு, அதிக செலவழிக்கின்றனர். அதில், சில இடங்களில் மதுவுக்கு அதிகளவில் செலவழிப்பதால், பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனர்.
இதனை தவிர்க்க, இனிவரும் காலங்களில் முன்னோர் பாதையை பின்பற்றுவதுடன், கலாசார சீரழிவை தடுக்கவும் பல கிராமங்களில் முடிவு செய்யப்பட்டு வருகிறது.
சமுதாய சீர்திருத்த கூட்டம்
இந்நிலையில், தொதநாடு சீமைக்கு உட்பட்ட, தும்மனட்டி கிராமத்தில், குந்தச்சப்பை, கெந்தொரை, கப்பச்சி, தும்மனாடா, மோரிகல், பரலட்டி, கம்பட்டி, அரசுகல் கம்பட்டி, மடித்தொரை மற்றும் மைனலா ஆகிய, 11 குக்கிராம மக்கள் ஒருங்கிணைந்த சமுதாய சீர்த்திருத்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
தும்மனட்டி ஊர் தலைவர் கண்ணன் வரவேற்றார். கிராம தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். 'நாக்கு பெட்டா' தலைவர் முருகன் மற்றும் தொதநாடு சீமை நலச்சங்க தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதில், கிராம மக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. மக்களின் ஒருமித்த கருத்துகளுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருமணம், சீர், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் போன்ற சுபநிகழ்களில், விருந்தினர்களுக்கு மதுபானம் வழங்கப்படுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
திருமணத்திற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்ப்பதுடன், மணப்பெண் வீட்டிற்கு புடவை, நகைகள் மற்றும் பழ வகைகள் ஆகியவற்றை கொண்டு சென்று வழங்குவதை நீக்க வேண்டும்.
மாறாக, மணமகன் குடும்பத்தை சேர்ந்த பெரியவர்கள், மணமகள் வீட்டிற்கு சென்று, பெரியோர் முன்னிலையில், மணப்பெண்ணின் சம்மதத்தை பெற்று, பாரம்பரிய முறைப்படி, எளிமையாக, அன்றைய தினமே திருமண தேதியை தீர்மானிக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்களை தாய் வீட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்பாக, கணவன் வீட்டுக்கு சென்று பெண் வீட்டார், வளைகாப்பு நடத்தி, உணவு சமைத்து வழங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இத்தகைய தீர்மானங்களை பின்பற்றினால், மக்களின் பொருளாதார பாதிப்புகள் தவிர்க்கப்படும்.
இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.