/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு வருவாய் துறை எச்சரிக்கை
/
தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு வருவாய் துறை எச்சரிக்கை
தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு வருவாய் துறை எச்சரிக்கை
தொடரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: மக்களுக்கு வருவாய் துறை எச்சரிக்கை
ADDED : ஆக 18, 2025 07:49 PM

-நிருபர் குழு-
மாவட்டத்தில் தொடரும் மழையால், முதுமலை மாயாறு, பாண்டியார்- புன்னம்புழா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றோர மக்களுக்கு வருவாய் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், முழுவதும் பருவ மழை தொடர்ந்து வருகிறது. அதில், கூடலுார், முதுமலை, தேவாலா, நடுவட்டம் பகுதிகளில் நேற்று முன்தினம், முதல் பருவமழை தீவிரமடைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கூடலுாரில் அதிகபட்சமாக, 13 செ.மீ., பதிவாகி உள்ளது.
இதனால், கூடலுாரில் உற்பத்தியாகி, கேரளா சாளியார் ஆற்றில் சங்கமிக்கும், பாண்டியார் - புன்னம்புழா ஆறு; முதுமலை புலிகள் காப்பகம் வழியாக, பவானி ஆற்றில் இணையும் மாயாறு ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது
மாயாறு ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, தெப்பக்காடு பகுதியில், தெப்பக்காடு -- மசினகுடி சாலையை இணைக்கும் வனத்துறைக்கு சொந்தமான, சாலை நடுவே உள்ள பாலம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது.
இரு வீடுகள் சேதம் கூடலுார் தேவாலா வாழவயல் பகுதியில், நவமணி என்பவரின் வீட்டின் சமையல் அறை சேதமடைந்தது. மார்த்தோமா நகர் பகுதியில் தங்கராஜ் என்பவரின் வீட்டின் கழிப்பறை சுவர் சேதமடைந்தது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. ஏழுமுரம் சாலையில், தோட்டமூலா ஜங்ஷன் அருகே, சாலை மழை வெள்ளத்தில் மூழ்கியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. மழை நீர் வடிந்தப்பின் போக்குவரத்து சீரானது.
அதேபோன்று, காசிம்வயல், கொக்கோகாடு, முதல் மைல் பகுதிகளில், ஆறுகளில் ஏற்பட்ட மழை வெள்ளம், அதனை ஒட்டிய குடியிருப்பில் சூழ்ந்ததால், மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். மழை குறைந்த பின், மழை வெள்ளம் வழிந்தோடியதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். அப்பகுதியை கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், தாசில்தார் முத்துமாரி, வருவாய் ஆய்வாளர் ராம்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
வருவாய் துறை எச்சரிக்கை வருவாய் அதிகாரிகள் கூறுகையில், 'தொடரும் மழையால் ஆறுகளில் அதிகரித்து வரும் வெள்ளதால், உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட யாரும் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம்,' என்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கூடலுாரிலும், கேரளாவிலும் ஆண்டுதோறும் ஒரே நேரத்தில் பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. பருவமழையின் போது கேரளாவிலும் தண்ணீர் தேவை இருக்காது. இதனால், கேரளா சாளியார் ஆற்றில் கலக்கும் பாண்டியார் - புன்னம்புழா ஆற்று நீர் வீணாகிறது. மழை காலங்களில் வீணாகும் நீரை, தமிழகத்துக்கு திருப்பி விட்டு சேமித்து பயன்படுத்த முடியும். மாயாறு, பாண்டியார் -புன்னம்புழா ஆறுகளை இணைப்பதன் மூலம், ஆற்று நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியும்,' என்றனர்.
* பந்தலுார் பஜார் பகுதியில் இருந்து மருத்துவமனை வழியாக இரும்பு பாலம் செல்லும் சாலையில், பிளவு ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் நுகர்பொருள் உணவு கிடங்கு பணி மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுமான பொருட்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள் தொடர்ந்து சென்றால், சாலை முழுமையாக துண்டிக்கப்படும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது, ஆட்டோ உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வரும் நிலையில், சாலை முழுமையாக பாதிக்கப்படும் முன்னர், நகராட்சி நிர்வாகம் சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும்.
* ஊட்டி நகரில் நேற்று காலை வண்டி சோலை பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு நுாற்றாண்டு பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், சங்கிலி முனீஸ்வரர் கோவில் சேதமடைந்தது. தீயணைப்பு துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று இரண்டு மணி நேரம் போராடி 'பவர்ஷா' உதவியுடன் மரத்தை அறுத்து, பொக்லைன் உதவியுடன் அகற்றினர்.
ஊட்டியில் நேற்று மாலை வரை மழை தொடர்ந்ததால் படகு இல்ல ஏரியில் மிதி படகு சவாரி நிறுத்தப்பட்டது. மாவட்ட முழுவதும் காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.