/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குப்பை தொட்டியாக மாறிய ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலம்
/
குப்பை தொட்டியாக மாறிய ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலம்
குப்பை தொட்டியாக மாறிய ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலம்
குப்பை தொட்டியாக மாறிய ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலம்
ADDED : மார் 28, 2025 09:13 PM

கோத்தகிரி; கோத்தகிரி ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலம் கட்டட கழிவுகளை கொட்டி குப்பை தொட்டியாக மாறி வருகிறது.
கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட, ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம், நகரில் உள்ள, 21 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளின் தண்ணீர் தேவையை, பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக விளங்குகிறது. மேலும், பல கிராமங்கள் இதனால், பயனடைந்து வருகின்றன. தற்போது, கட்டட கழிவுகள் உட்பட, குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை தொட்டியாக மாறி வருகிறது.
சதுப்பு நிலங்களை பாதுகாக்க ஏதுவாக மாநில அரசால் வாரியம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.
ஆனால், அந்த வாரியம் செயல்பட்டதாக தெரியவில்லை. இதனால் இந்த சதுப்பு நிலம், கழிவுகள் குவிக்கப்பட்டு, சமீப காலமாக சீரழிந்து வருகிறது. வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடவு செய்தும் பயனில்லை.
மாவட்ட நிர்வாகம், இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டடக்கழிவு உட்பட, குப்பைகள் கொட்டுபவர்கள் மீது, அபராதத்துடன் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். மேலும், பொது மக்கள் குறிப்பாக, மாணவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி,சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட, நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'கிரீன் சாம்பியன்' விருது ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ கூறுகையில், ''கோத்தகிரி நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் இந்த சதுப்பு நிலம் மக்களுக்கு வரப்பிரசாதம். இப்பகுதியில், பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு கிணறுகள் அமைக்கப்பட்டு, தற்போது, பயனற்று கிடக்கிறது.
சமீபகாலமாக, இப்பகுதியில் வாகனங்கள் இயக்கப்படுவதும், கட்டட கழிவுகள் உட்பட குப்பைகள் கொட்டுவதும் தொடர்கிறது. இதனால், சதுப்பு நிலம் உருமாறி வருகிறது. பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எதிர்கால சந்ததிகளை கருத்தில் கொண்டு, அதி முக்கியமான சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.