/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.20 கோடி வரை புழக்கம் குறையும் அபாயம்: கோவைக்கு மாறும் ஏல மையம்? நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலுக்கு ஆபத்து
/
ரூ.20 கோடி வரை புழக்கம் குறையும் அபாயம்: கோவைக்கு மாறும் ஏல மையம்? நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலுக்கு ஆபத்து
ரூ.20 கோடி வரை புழக்கம் குறையும் அபாயம்: கோவைக்கு மாறும் ஏல மையம்? நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலுக்கு ஆபத்து
ரூ.20 கோடி வரை புழக்கம் குறையும் அபாயம்: கோவைக்கு மாறும் ஏல மையம்? நீலகிரி மாவட்ட தேயிலை தொழிலுக்கு ஆபத்து
ADDED : ஜன 04, 2024 10:49 PM

குன்னுார்: குன்னுார் தேயிலை ஏல மையம், கோவைக்கு மாற்றம் செய்யும் அபாய கட்டத்தில்
உள்ளதால், நீலகிரி பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை விவசாயத்தை நம்பி, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களால், உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் குன்னுார் தேயிலை மையத்தில் ஏலம் விடப்படுகிறது.
வாரத்திற்கு சராசரியாக, 15 லட்சம் முதல் 22 லட்சம் கிலோ வரை தேயிலை துாள் ஏலம் விடப்படுகிறது.
இந்நிலையில், ஏலம் விடப்படும், குன்னுார் தேயிலை வர்த்தக சங்கத்தில் (சி.டி.டி.ஏ.,) கடந்த செப்., மாதம் நடந்த ஆண்டு பொது குழு கூட்டத்தில், வர்த்தகர் பிரிவில் தலைவர் தேர்வு செய்ய வேண்டிய நிலையில், அதில் விற்பனையாளரும் பதவிக்காக போட்டியிட்டதால் சமநிலை ஏற்பட்டு குழப்பம் ஏற்பட்டது.
இதற்கு தற்காலிக தீர்வாக, தேயிலை வாரியம் சார்பில் நிர்வாக மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட தாஸ் என்பவரும் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தேயிலை வாரிய அதிகாரிகளிடம் நடந்த பேச்சுவார்த்தையில் பழைய தலைவரின் மூலம், நடப்பாண்டின் முதல் இரு ஏலங்கள் நடத்த அனுமதி அளித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏலங்கள் நடந்து வருகிறது.
ஏல மையத்தின் மூலம் தேயிலை துாள் விற்பனைக்கான, வருகை மற்றும் எடை அறிக்கை (ஏ.டபிள்யூ.ஆர்.,) அட்டவணை தயார் செய்வது; ஏல விற்பனை முழு நிலவரம் வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இங்கு பணியாற்றிய, 8 பேரின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
தொடரும் பனிப்போர்
இங்கு, விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இடையே நடக்கும் பனிப்போர் காரணமாக, ஏல மைய 'லைசன்ஸ்' ரத்து ஆகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இதனால், குன்னுாரில் நடப்பாண்டில் நடக்க வேண்டிய, 3வது ஏலம் கோவை ஏல மையத்திற்கு மாற்றப்பட்டால், நீலகிரிக்கு வாரந்தோறும் கிடைக்கும், 15 கோடி முதல் 20 கோடி ரூபாய் வரையிலான மொத்த வருமானத்திற்கான வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே, குன்னுாரில் இருந்த தேயிலை குடோன்கள், கோவை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டதால் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதித்தது. தற்போது, ஏல மையமும் மூடப்பட்டால், பண பரிவர்த்தனை குறைந்து நீலகிரியில் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட வாய்ப்புள்ளது.
டீசர்வ் ஏலம் அவசியம்
நீலகிரி சிறு தேயிலை விவசாயிகள் விழிப்புணர்வு மைய அமைப்பாளர் வேணுகோபால் கூறுகையில், ''குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நிர்வாக குழப்பங்களால் மறைமுகமாகவும், நேரடியாகவும் தேயிலை தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதற்கு முன்பே ஆரம்பகட்டத்தில் தீர்வு காண அதிகாரிகள் சரியான முடிவை இதுவரை எடுக்கவில்லை.
அடுத்து வரும் 3வது ஏலத்தை கோவைக்கு கொண்டு செல்வதற்கு தீவிரம் காட்டும் நிலையில், இங்குள்ள அரசின் 'டீசர்வ்' ஏலத்திற்கு இந்த நடைமுறையை மாற்ற முன்வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. குன்னுார் ஏல மையத்தில் நடக்கும் பனிப்போருக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், டீசர்வ் ஏலத்தின் மூலம் நீலகிரியின் தேயிலையை ஏலம் விட வேண்டும்,'' என்றார்.
தேயிலை வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'தற்போது விடுமுறைக்கு சென்ற உயர் அதிகாரிகள் வந்தவுடன் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்,' என்றனர்.