மண்ணுடன் கலங்கி காணப்படும் ஆற்று நீர் விலங்குகளுக்கும், பழங்குடிகளுக்கும் குடிநீர் பிரச்னை
மண்ணுடன் கலங்கி காணப்படும் ஆற்று நீர் விலங்குகளுக்கும், பழங்குடிகளுக்கும் குடிநீர் பிரச்னை
ADDED : ஜன 10, 2026 06:53 AM

கூடலுார்: முதுமலை, மாயாறு ஆற்று நீர், மீண்டும் கலங்கிய நிலைக்கு மாறியுள்ளதால், பழங்குடியினர், வனவிலங்குகளுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
ஊட்டி கிளன்மார்கன் அணையில் இருந்து, பராமரிப்பு பணிக்காக, 4 வாரங்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையிலிருந்து வெளியேறிய மண்ணுடன் கலந்த நீரால் முதுமலை மாயாறு ஆற்று நீர் கலங்கியது. பழங்குடி மக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். வனவிலங்குகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து, மசினகுடி ஊராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வந்தனர்.
சில நாட்களில், ஆற்று நீர், தெளிந்த நிலைக்கு மாறியதால், 3ம் தேதி முதல் மீண்டும் அதிலிருந்து மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்தனர்.
இந்நிலையில், நேற்றும் ஆற்று நீர் மீண்டும் கலங்கி வருவதால், மீண்டும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து, மசினகுடி ஊராட்சி நிர்வாகம் கிராம மக்களுக்கு வாகனங்களில் நேற்று முதல் குடிநீர் சப்ளை செய்த துவங்கி உள்ளனர்.
இந்நிலையில், யானை உட்பட வனவிலங்குகள் மண் கலந்து குடிநீர் குடிக்க முடியாமல், தண்ணீர் தேடி வேறு பகுதிக்கு இடம்பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் கூறுகையில், 'கிளன்மார்கன் அணையில் இருந்து மீண்டும் வெளியேறும் மண் கலந்த நீரால், ஆற்று நீர் கலங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஊராட்சி மூலம் குடிநீர் சப்ளை செய்தாலும், மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,'என்றனர்.
குந்தா மின் உற்பத்தி நிலைய மேற்பார்வை பொறியாளர் சேகர் கூறுகையில், 'கிளன்மார்கன் அணை பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறோம். பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், அணையில் ஏற்படும் கசிவுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால், அணையில் இருந்து வெளியேறும் நீர் கலங்கிய நிலையில் காணப்படுகிறது. இப்பணிகள், 12ம் தேதிக்குள் நிறைவு பெறும்,''என்றார்.
