ADDED : மார் 12, 2026 05:23 AM

பந்தலுார்: பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், அனுமதி இன்றி ஆற்று நீர் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், பாயும் ஆறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து தேயிலை, காபி, நேந்திரன் வாழை உள்ளிட்ட விவசாயங்கள், சாலை சீரமைப்பு பணிகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது, நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து வரும் நிலையில், மக்கள் மற்றும் வன விலங்குகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கிடையில் தண்ணீரை சக்தி வாய்ந்த டீசல் மற்றும் மின் மோட்டாரை கொண்டு, அதிக அளவில் உறிஞ்சுவதால், நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதுகுறித்து, பொதுமக்கள் வருவாய் துறையினருக்கு புகார் தெரிவித்தால், புகார் கூறுபவர்களின் பெயர்களை, தண்ணீர் திருடுபவர்களிடம், சில அரசு ஊழியர்கள் தெரிவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, தொடரும் தண்ணீர் திருட்டை தடுக்க, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
