/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட சாலை; பள்ளி மாணவர்கள் நோயாளிகள் சிரமம்
/
முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட சாலை; பள்ளி மாணவர்கள் நோயாளிகள் சிரமம்
முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட சாலை; பள்ளி மாணவர்கள் நோயாளிகள் சிரமம்
முன் அறிவிப்பு இல்லாமல் மூடப்பட்ட சாலை; பள்ளி மாணவர்கள் நோயாளிகள் சிரமம்
ADDED : ஜன 09, 2025 10:39 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே முக்கட்டி செல்லும் சாலை சீரமைப்பு பணிக்காக முன் அறிவிப்பின்றி மூடப்பட்டதால், பள்ளி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமப்பட்டனர்.
பந்தலுாரில் இருந்து உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, முக்கட்டி வழியாக கேரளா மாநிலம் வயநாடு மற்றும் கூடலுார் பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. மிகவும் குறுகலான இந்த சாலையில் அவசர நேரங்களில், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், நெடுஞ்சாலை துறை மூலம் நேற்று இந்த சாலையில் முக்கட்டியிலிருந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால்,இந்த வழியாக வேறு எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு சாலை மூடப்பட்டது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், சாலை மூடப்பட்டதால் பள்ளி கல்லுாரி செல்லும் வாகனங்கள், கேரளா மாநிலம் செல்லும் நோயாளிகள் வாகனங்கள் மற்றும் அரசு பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றன.
பள்ளி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் வேறு வழியின்றி, இறங்கி நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சாலை சீரமைப்பு பணியின் போது, இரு மாநில சாலை மூடப்படுவது குறித்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், மற்றும் அதிகாரிகள் எந்தவித அறிவிப்பும் கொடுக்காதது மக்களை அதிருப்தி அடைய செய்தது. காலை நேர குளிரில் இந்த வழியாக நடந்து செல்வதில் அனைவரும் சிரமப்பட்டனர்.
மக்கள் கூறுகையில், 'இது போன்ற தருணங்களில் மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பயன்பெறும் வகையில், முன்னதாகவே அறிவிக்க செய்ய வேண்டும். இரு மாநிலங்களுக்கான இணைப்பு சாலையை தரமாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
நெடுஞ்சாலை துறை பொறியாளர் சுப்ரமணியம் கூறுகையில்,''சாலை சீரமைப்பு பணி, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது. சாலை மூடப்பட்டது குறித்து எனக்கு தெரியாது. விசாரிக்கிறேன்,'' என்றார்.