/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ரூ 1.06 கோடியில் சாலை பணி துவக்கம்
/
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ரூ 1.06 கோடியில் சாலை பணி துவக்கம்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ரூ 1.06 கோடியில் சாலை பணி துவக்கம்
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ரூ 1.06 கோடியில் சாலை பணி துவக்கம்
ADDED : ஜன 25, 2024 12:09 AM
அன்னூர் : போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியது.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில், கோவில்பாளையம், அன்னூர், புளியம்பட்டி வழியாக, தினமும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. புறவழிச்சாலை இல்லாததாலும், இருவழிச் சாலை மட்டுமே உள்ளதாலும் அன்னூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
இதற்கு தீர்வு காண மேட்டுப்பாளையம் சாலை, சிறுமுகை சாலை, சத்தி சாலை, அவிநாசி சாலையை இணைக்கும் அரை வட்டச் சாலை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றி நீலகிரி எம்.பி., ராஜா மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆகியோரிடம் மனு அளித்தது.
இதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அன்னூர் குளக்கரையில் சாலை அமைக்க ஆட்சேபனை இல்லை என சான்று அளித்தது.
நகர்ப்புற வளர்ச்சி துறையில், சிறப்பு திட்டத்தின் கீழ், குளக்கரையில் சாலை அமைத்து, நாகமாபுதூர் வரை சாலையை மேம்படுத்த, ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெண்டர் விடப்பட்டு, பணி உத்தரவும் வழங்கப்பட்டது. இந்த சாலை அமைக்கப்பட்டால் மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து அன்னூர் நகருக்குள் வராமல் சிறுமுகை சாலை, சத்தி சாலை மற்றும் அவிநாசி சாலைக்கு செல்ல முடியும். போக்குவரத்து நெரிசல் குறையும்.
இதற்கான பணி துவக்க விழா நடந்தது. நீலகிரி எம்.பி., ராசா பணியை துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணை தலைவர் விஜயகுமார், கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து 15 லட்சம் ரூபாயில், சத்தி ரோட்டில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் திறந்து வைக்கப்பட்டது, தென்னம்பாளையம் ரோட்டில் 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது.