UPDATED : ஆக 30, 2026 03:15 PM
ADDED : ஆக 30, 2026 12:40 PM

பந்தலூர்: பந்தலூர் - -ஊட்டி சாலையில் உருவாகியுள்ள அருவி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
பந்தலூரில் இருந்து கூடலூர் மற்றும் ஊட்டி செல்லும் சாலையில், நீர்மட்டம் வனப்பகுதி அமைந்துள்ளது. மே மாத இறுதியில் இங்குள்ள பாறையில் தண்ணீர் பெருக்கெடுத்து அருவியாக கொட்டும்.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால், நீர் வரத்து இல்லாமல் பாறை இடுக்குகள் காய்ந்து காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்ததால், மலைமுகடில் இருந்து தண்ணீர் ஊற்றெடுத்து, பாறைகளில் அருவியாக கொட்டி வருகிறது.
சாலை ஓரத்தில் காட்சி தரும் அருவியை, இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
ரசிக்க வைக்கும் தண்ணீரை தேக்கி வைக்க வழியில்லாத நிலையில், கேரளா மாநிலத்திற்கு சென்று அரபிக் கடலில் கலந்து வீணாகி வருகிறது.
இதன் கீழ் பகுதியில் தடுப்பணை கட்டி தண்ணீரை சேமித்து, மக்களுக்கு கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டால் பயன் தரும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
