/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாடகை வீட்டை லீசுக்கு விட்டு ரூ.12 லட்சம் மோசடி
/
வாடகை வீட்டை லீசுக்கு விட்டு ரூ.12 லட்சம் மோசடி
ADDED : ஜன 26, 2025 07:48 AM
கோவை : வாடகைக்கு வசித்த வீட்டை, வேறொரு நபருக்கு லீசுக்கு விட்டு, 12 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டம், வடவள்ளி, மகாராணி அவென்யூவை சேர்ந்தவர் செல்வராஜ், 55. இவர் குடியிருக்க லீசுக்கு வீடு தேடி வந்தார். அது குறித்து ஒரு செயலியில் பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்து ராஜசேகர் என்பவர், செல்வராஜை அழைத்தார்.
வடவள்ளி பகுதியில் உள்ள தன் வீட்டை, லீசுக்கு கொடுக்கவுள்ளதாக தெரிவித்தார். செல்வராஜ் சென்று வீட்டை பார்த்தார். வீடு பிடித்திருந்ததால் குடியேற முடிவு செய்தார். இதற்காக, 12 லட்சம் ரூபாயை ராஜசேகருக்கு கொடுத்தார்.
கடந்த மாதம், 10ம் தேதி ராஜசேகர், லீஸ் ஒப்பந்தம் ஒன்றை செல்வராஜூக்கு கொடுத்தார். பின்னர், செல்வராஜ் அந்த வீட்டில் குடியேறினார்.
சில நாட்களுக்கு பிறகு, ஈரோட்டில் இருந்து கவிதா என்பவர், செல்வராஜ் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை ராஜசேகருக்கு வாடகைக்கு விட்டதாகவும், வாடகை வசூல் செய்ய வந்ததாகவும் செல்வராஜிடம் தெரிவித்தார். அப்போது தான், ராஜசேகர் தன்னை ஏமாற்றியது தெரியவந்தது.
செல்வராஜ் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.