/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகளுக்கு ரூ.1.30 கோடி நிலுவை தொகை; நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மனு
/
விவசாயிகளுக்கு ரூ.1.30 கோடி நிலுவை தொகை; நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மனு
விவசாயிகளுக்கு ரூ.1.30 கோடி நிலுவை தொகை; நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மனு
விவசாயிகளுக்கு ரூ.1.30 கோடி நிலுவை தொகை; நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு மனு
ADDED : டிச 27, 2024 10:22 PM
கோத்தகிரி; 'நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க மாநில முதல்வர் உத்தரவிட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்தை நம்பியுள்ள, 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகளில், 30 ஆயிரம் விவசாயிகள், தாங்கள் பறிக்கும் பசுந்தேயிலையை, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர்.
கடந்த, 30 ஆண்டுகளாக பசுந்தேயிலை விலை, உற்பத்தி செலவைவிட மிகவும் குறைவாக விலை கிடைத்த காரணத்தால், சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'இன்றைய சூழ்நிலையில், கிலோ ஒன்றுக்கு, 40 ரூபாய் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும்,' என, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தீர்வு கிடைக்கவில்லை.
நியாயமான விலை இல்லை
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு, மேலாண்மை நிர்வாக பொறுப்பில் உள்ள, 'இன்கோ சர்வ்' நிர்வாக அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மை, விவசாய விரோத போக்கின் காரணமாக நியாய விலை கிடைக்காமல் உள்ளது.
கடந்த, 2005ம் ஆண்டு முதல் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், பசுந்தேயிலைக்கு நிர்ணயித்த விலையை வழங்காமல், குறைத்து வழங்கப்படுகிறது.
அதே நேரத்தில், தனியார் தொழிற்சாலைகளில் இரண்டு முதல், 8 ரூபாய் வரை கூடுதலாக விலை வழங்கப்படுகிறது. அதிகாரிகளுடன் பலமுறை இது குறித்து தெரிவித்தும் பலன் இல்லை. கடந்த அக்., மாதம் வாரியம் அறிவித்த, 24.59 ரூபாய் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை.
துறை அமைச்சர், மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
நீலகிரி மாவட்ட சிறு, குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் வினியோகிக்கும் பசுந்தேயிலைக்கு, தேயிலை வாரியம் நிர்ணயித்த விலை, விவசாயிகளுக்கு கிடைக்காமல் உள்ளது. கடந்த அக்., மாத நிலுவை தொகை, ஒரு கோடியே, 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
''இந்த நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கவும், எதிர்வரும் காலங்களில், வாரியம் நிர்ணயிக்கும் விலையை கண்டிப்பாக வழங்க உத்தரவிட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்நிலையில், இந்த தொகையை உடனடியாக விடுவிக்க உத்தரவிடகோரி, மாநில முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

