/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கீழ்நாடுகாணி சாலையை சீரமைக்க ரூ.7.75 கோடி ஒதுக்கீடு; 'தினமலர் ' செய்தி எதிரொலி
/
கீழ்நாடுகாணி சாலையை சீரமைக்க ரூ.7.75 கோடி ஒதுக்கீடு; 'தினமலர் ' செய்தி எதிரொலி
கீழ்நாடுகாணி சாலையை சீரமைக்க ரூ.7.75 கோடி ஒதுக்கீடு; 'தினமலர் ' செய்தி எதிரொலி
கீழ்நாடுகாணி சாலையை சீரமைக்க ரூ.7.75 கோடி ஒதுக்கீடு; 'தினமலர் ' செய்தி எதிரொலி
ADDED : ஜூலை 20, 2025 10:04 PM
கூடலுார்; கூடலுாரில் சேதமடைந்துள்ள செம்பாலா, கீழ்நாடுகாணி சாலையை சீரமைக்க, 7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, கேரளா செல்லும் கோழிக்கோடு சாலை, தமிழக -கேரளா - கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். கேரளாவில் இருந்து நீலகிரி வரும் வாகனங்களுக்கு, வருவாய் துறையினர், நாடுகாணி பகுதியில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.
கூடலுாரில் இருந்து, தமிழக -கேரளா எல்லையான கீழ்நாடுகாணிவரை, 17 கி.மீ., துாரமுள்ள சாலையில், 9 கி.மீ., துாரம் சில ஆண்டுகளுக்கு முன் சீரமைத்தனர்.
ஆனால், மிக மோசமாக சேதமடைந்துள்ள, கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் செம்பாலா வரை, 1.5 கி.மீ., துாரமும், நாடுகாணியிலிருந்து மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை சீரமைக்கவில்லை. சாலையை சீரமைக்க தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
தற்போது, பெய்து வரும் பருவமழையில், சேதமடைந்துள்ள குழிகளில், மழைநீர் குளம் போல தேங்கி, சாலை தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. வாகனங்களை இயக்க ஓட்டுனர்கள், சுற்றுலாப் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
வாகன நுழைவு கட்டணம் வசூல் செய்தும், சேதமடைந்த சாலையை நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில் சாலையை சீரமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'சேதமடைந்த சாலையை சீரமைக்க, 7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் விடப்பட்டு பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
ஓட்டுனர்கள் கூறுகையில், 'நீண்ட போராட்டத்துக்கு பின் சாலை சீரமைக்க நிதி ஒதுக்கி இருப்பது வரவேற்க கூடியது. சாலை சீரமைப்பு பணியை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்