/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழைநீர் தேங்கும் சாலை; சீரமைக்க ரூ.8 கோடி
/
மழைநீர் தேங்கும் சாலை; சீரமைக்க ரூ.8 கோடி
ADDED : ஆக 25, 2025 09:04 PM

கூடலுார்; 'கூடலுார், செம்பாலா பகுதியில் மழை நீர் தேங்கும் சாலையை தரமாக சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, கோழிக்கோடு சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில், நாடுகாணியில் இருந்து, கேரளா நிலம்பூர், பந்தலுார் சாலைகள் உள்ளன.
கேரளாவில் இருந்து நிலம்பூர் வழியாக நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால், நாடுகாணி முதல் தமிழக- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி வரை, சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், வாகனங்களை இயக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று, கூடலுாரில் இருந்து செம்பாலா வரையிலான, 2 கி.மீ., சாலை, பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
இச்சாலையில், நெடுஞ்சாலை துறையினர் அவ்வப்போது, பாறை பொடி கலந்த ஜல்லிகற்களை கொட்டி, தற்காலிகமாக சீரமைக்கின்றனர்.
தற்போது, மழைபெய்வதால், அப்பகுதி மீண்டும் சேதமடைந்து, குழிகள் ஏற்பட்டு அதில், குளம் போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. அப்பகுதியை கடந்து செல்ல, டிரைவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில், 'கூடலுார் முதல் செம்பாலா வரையும், நாடுகாணி முதல் கீழ்நாடுகாணி வரையிலான சாலையை சீரமைக்க அரசு,7.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் விரைவில் துவங்கப்படும்,' என்றனர்.