/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லவ்டேல் முதல் பிங்கர்போஸ்ட் வரை சாலை பணி வாகன ஓட்டிகளுக்கு 'குட்நியூஸ்'மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.81 கோடி நிதி ஒதுக்கீடு
/
லவ்டேல் முதல் பிங்கர்போஸ்ட் வரை சாலை பணி வாகன ஓட்டிகளுக்கு 'குட்நியூஸ்'மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.81 கோடி நிதி ஒதுக்கீடு
லவ்டேல் முதல் பிங்கர்போஸ்ட் வரை சாலை பணி வாகன ஓட்டிகளுக்கு 'குட்நியூஸ்'மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.81 கோடி நிதி ஒதுக்கீடு
லவ்டேல் முதல் பிங்கர்போஸ்ட் வரை சாலை பணி வாகன ஓட்டிகளுக்கு 'குட்நியூஸ்'மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.81 கோடி நிதி ஒதுக்கீடு
ADDED : செப் 03, 2024 02:10 AM
ஊட்டி;ஊட்டி நகர் பகுதிக்கு வராமல், மாற்றுப்பாதையில் லவ்டேல் சந்திப்பு முதல் பிங்கர்போஸ்ட் வழியாக, கூடலுார் சாலையை இணைக்க, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் ஆண்டு தோறும் ஏப்., - மே மற்றும் செப்., - அக்., மாதங்களில் சீசன் நடக்கிறது. சீசனுக்கு வெளி மாநில, வெளிமாவட்ட மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக, சீசன் காலங்களில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு நாட்களில் நாள்தோறும், 10 முதல் 15 ஆயிரம் வாகனங்கள், ஊட்டிக்கு வந்து செல்கின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றி பார்க்க திட்டம் வகுத்து வந்தாலும், ஒரே நாளில் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவர்கள் சுற்றுலா வாகனங்களில் அமர்ந்து பெரும்பாலான நேரம் வீணாகிறது. இதை கருத்தில் கொண்ட சென்னை ஐகோர்ட், சீசன் சமயத்தில் மட்டும், இ - பாஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
மாற்றுப்பாதை திட்டம்
இந்நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண, மாநில நெடுஞ்சாலைத்துறை புதிய திட்டத்தை வகுத்தது. அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், குன்னுாருக்கு செல்லாமல் நேரடியாக ஊட்டிக்கு செல்லும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பில், 20.5 கி.மீ., துாரத்துக்கு, காட்டேரி, சேலாஸ், கெந்தளா, கேத்தி பாலாடா, கொல்லிமலை, காந்திபேட்டை வழியாக, ஊட்டிக்கு செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
ரூ. 81 கோடி நிதி ஒதுக்கீடு
இந்த சாலையை மேலும் விரிவுப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய திட்ட அறிக்கையை தயார் செய்துள்ளது. அதில், ஊட்டி நகர் பகுதிக்கு வராமல் மாற்றுப்பாதையாக, லவ்டேல் சந்திப்பு, அன்பு அண்ணா காலனி, மஞ்சனக்கொரை, காந்தள், பிங்கர்போஸ்ட் வழியாக, கூடலுார் சாலையை இணைக்கிறது.
இதற்கான திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலோடு மாநில அரசுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டது. மாநில அரசு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிட்டது.
இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் இடங்களை, கலெக்டர் லட்சுமி பவ்யா, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டு சாலை வரைப்படத்தை ஆய்வு செய்தார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் கூறுகையில், ''போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், ஏற்கனவே, 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காட்டேரி முதல் லவ்டேல் சந்திப்பு வரை மாற்றுப்பாதை தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
தற்போது, மாற்றுப்பாதையாக லவ்டேல் சந்திப்பு முதல் பிங்கர்போஸ்ட் வரை கூடலுார் சாலையை இணைக்கும்வகையில், 10.85 கி.மீ., துாரத்திற்கு சாலை பணி மேற்கொள்ள, மாநில அரசு ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.