/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
69 பயனாளிகளுக்கு ரூ.46.49 லட்சம் நலத்திட்ட உதவி
/
69 பயனாளிகளுக்கு ரூ.46.49 லட்சம் நலத்திட்ட உதவி
ADDED : பிப் 14, 2025 09:00 PM
கோத்தகிரி:
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சி, குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிட பள்ளியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், 69 பயனாளிகளுக்கு, 46.49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கலெக்டர் லட்சுமி பவ்யா கூறியதாவது:
அனைத்து அரசு துறை அலுவலர்கள் நேரடியாக கிராம பகுதிகளுக்கு சென்று, மக்கள் தொடர்பு முகாம் மூலமாக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதோடு, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.
அதன்படி, இப்பகுதிகளில், மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் திட்டம் சார்பில், 4 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 9.50 லட்சம் ரூபாய் மதிப்பில் தொழில் தொடங்க வங்கி கடன் இணைப்பு ஆணை; மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 2 பயனாளிகளுக்கு 5.60 லட்சம் ரூபாய்கான கல்வி கடன் உதவி பெறுவதற்கான ஆணை; வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு, 2.10 லட்சம் மதிப்பில் நுண் தொழிற் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் பொறியியல் துறை சார்பில், 2 பயனாளிகளுக்கு, 19, 200 ரூபாய் மதிப்பில் தேயிலை அறுவடை இயந்திரங்கள்; தோட்டக்கலை துறை சார்பில், ஒரு பயனாளிக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிப்பம் கட்டும் அறை; மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 3 பயனாளிகளுக்கு, 19,980 ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள்; 10 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 5 லட்சத்து, 11 ஆயிரத்து, 200 ரூபாய் என, மொத்தம், 69 பயனாளிகளுக்கு, 46.49 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு உதவிகளுக்கான ஆணை வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, அப்பகுதியில் உண்டு உறைவிடப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
கூடுதல் ஆட்சியர் கவுசிக், குன்னுார் சார் ஆட்சியர் சங்கீதா, தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் முன்னோடி வங்கி பொது மேலாளர் சதானந் கல்கி உட்பட, அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர்.