ADDED : ஜன 24, 2024 01:08 AM

'நீலகிரியில் நலிவடைந்து வரும் சாக்கு பை வியாபாரத்தை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மண்டி வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
'பிளாஸ்டிக்' பை பயன்பாட்டால் ஆபத்து
மண்டி வியாபாரிகளை காக்குமா அரசு?
ஊட்டி, ஜன. 24---
நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அதில், கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் அறுவடைக்கு பின், ஊட்டி உட்பட மாவட்டத்தில் பிற இடங்களிலிருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரு, கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
காய்கறிகள் ஈரப்பதத்துடன் இருக்கும் வகையில், சாக்கு பைகளில் நிரப்பி கொண்டு செல்லப்படுகிறது. தேவையான சாக்கு பைகளை மண்டிகளிலிருந்து விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.
சர்க்கரை, கோதுமை, மைதா உள்ளிட்ட மளிகை பொருட்களை வெளியிடங்களிலிருந்து சாக்கு பைகளில் கொண்டுவரப்படும் போது, இதனை மண்டி உரிமையாளர்கள் விலை கொடுத்து வாங்கி சென்று பின், மலை காய்கறிகள் நிரப்பும் வகையில் தயார்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது மளிகை பொருட்கள் அனைத்தும் 'பிளாஸ்டிக் பை' களில் கொண்டு வரப்படுவதால் சாக்கு பை பயன்பாடு அடியோடு குறைந்தது.
தற்போது, கூட்டுறவு நிறுவனம், சிவில் சப்ளைக்கு, வரும் பொருட்கள் மட்டும் சாக்கு பையில் வருவதால் ஆண்டுக்கு ஒருமுறை டெண்டர் மூலம் வாங்கி,மண்டி வியாபாரிகள் விவசாயிகளுக்கு விலைக்கு விற்கின்றனர்.
'பிளாஸ்டிக்' பை ஆதிக்கம்
மலை காய்கறிகளை கொண்டு செல்ல சாக்கு பைகள் பயன்படுத்தி வந்த நிலை மாறி, தற்போது பல இடங்களில், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. சணல் கயிறுக்கு பதிலாக பிளாஸ்டிக் கயிறு பயன்படுத்தப்படுகிறது. இதில், முட்டை கோஸ் மூட்டைக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பல இடங்களில், வீணாகும் பிளாஸ்டி பை, கயிறை தோட்டங்களில் சிலர் வீசி எறிவதால் மலை காய்கறி கழிவுகளை உண்ண வரும் கால்நடைகள் பிளாஸ்டிக் பைகளை உட்கொள்கின்றன. இதனால், உடல் உபாதைகள் ஏற்பட்டு இறக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.
தொழிலை மேம்படுத்த உதவணும்
மண்டி வியாபாரி கணேசன் கூறுகையில், ''மளிகை பொருட்கள் கொண்டு வரும் சாக்கு பைகளை அந்தந்த கடைகளிருந்து விலை கொடுத்து வாங்கி வருகிறோம். தவிர, சிலர் வீடுகள் தோறும் சென்று சாக்கு பை வாங்கி வந்து மண்டிகளுக்கு கொடுத்து அதற்கான தொகையை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில், மளிகை பொருட்கள் மூட்டைகள் அனைத்தும் பிளாஸ்டிக் பை களில் கொண்டு வருவதால், சாக்கு பை வியாபாரம் நலிவடைந்ததுடன், பிளாஸ்டிக் பயன்பாடால் கால்நடைகள் இறக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது. சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு சாக்குபை தொழிலை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்

