/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் முடவாட்டுக்கால் கிழங்கு விற்பனை
/
கூடலுாரில் முடவாட்டுக்கால் கிழங்கு விற்பனை
ADDED : ஜூலை 21, 2025 11:32 PM

கூடலுார்; கூடலுாரில் பழங்குடி மக்கள் வினியோகிக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளது.
நீலகிரி வாழ் பழங்குடியின மக்கள் உடல் நலம் காக்க, வனத்தில் இயற்கையாக கிடைக்கும் பல்வேறு கிழங்கு வகைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதில், முடவாட்டுக்கால் கிழங்கு, கருடன் கிழங்கு, கண்வலி கிழங்கு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அதில், கூடலுார் பகுதியில் முடவாட்டுக்கால் கிழங்கு, பழங்குடிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. நம் மாநிலத்தில், கொல்லிமலை, ஏற்காடு பகுதிகளில் இவை அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில், கூடலுார் வனப்பகுதிகளில் கிடைக்கும் இதன் கிழங்கை, பழங்குடியினர் எடுத்து வந்த, காய்கறி கடைளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனை வியாபாரிகள் கிலோ, 120 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'சமீப காலமாக கடைகளுக்கு வரும் மக்கள், முடவாட்டுக்கால் கிழங்கை விரும்பு வாங்கி செல்கின்றனர். இதன், தேவை அதிகரித்துள்ளதால், காய்கறிகள் போன்று, இந்த கிழங்கையும் விற்பனைக்கு வைத்துள்ளோம்,' என்றனர்.
கூடலுார் பழங்குடியான சடையன் கூறுகையில், ''இந்த கிழங்கை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் உடலில் உள்ள வலிகள் நீங்கும். இதனை 'சூப்' குடிப்பதை போல பயன்படுத்த வேண்டும். நாங்கள் மூட்டுவலி, முழங்கால் வலிக்கு இதனை காலங்காலமாக பயன்படுத்தி வருகிறோம்,'' என்றார்.
கூடலுார் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் கமலநாதன் கூறுகையில்,'' இந்த கிழங்கில் அதிகளவில் 'புரோட்டின்' இருப்பதால் இதனை சூப் வைத்து குடிப்பதால் உடல் வலி குறைய வாய்ப்புள்ளது. அதனால், பழங்குடியினர் பயன்படுத்தி வருகின்றனர்,'' என்றார்.