ADDED : செப் 18, 2026 06:42 PM
பந்தலுார்: ‘நெல்லியாளம் நகராட்சியில், சம்பளம் வழங்கவில்லை,’ என கூறி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லியாளம் நகராட்சியில் கூடலுார் பகுதியை சேர்ந்த, தி.மு.க., நிர்வாகி ஒருவரின் பெயரில், துப்புரவு பணி ஒப்பந்தம் முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் பணியை மேற்கொண்டு வருகிறார். பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், நேற்று காலை ஒப்பந்த முறை துாய்மை பணியாளர்கள், 39 பேர் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கமிஷனர் சசிகுமார் பேசுகையில், ‘‘ தினசரி ஆறு டன் குப்பை கழிவுகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிலையில், மூன்று முதல் நான்கு டன் மட்டுமே எடுத்துவரப்படுகிறது. டன் ஒன்றிற்கு, 6,600 ரூபாய் வழங்கப்படும் நிலையில், ‘குறைவான குப்பை, கூடுதலான நிதி ஒதுக்கீடு’ என்பதை ஏற்று கொள்ள முடியாது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார். இதை தொடர்ந்து, நகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது.
