/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஜெகதளா பேரூராட்சியில் துாய்மை பணியாளர்கள் தர்ணா
/
ஜெகதளா பேரூராட்சியில் துாய்மை பணியாளர்கள் தர்ணா
ADDED : ஆக 05, 2025 10:35 PM

குன்னுார்; குன்னுார் ஜெகதளா பேரூராட்சியில், போராட்டங்களுக்கு தலைமை வகித்த துாய்மை பணியாளரை நீக்குவதாக கூறியதை கண்டித்து, தர்ணா போராட்டம் நடந்தது.
குன்னுார் ஜெகதளா பேரூராட்சியில், 36 தற்காலிக துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். 'துாய்மை பணியாளர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும், தற்காலிக பணியாளர்களை குறைந்த சம்பளத்தில், ஒப்பந்த அடிப்படையில் மாற்ற கூடாது,' என, வலியுறுத்தி, தற்காலிக பணியாளர் டெய்சிராணி என்பவரின் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், 'நேற்று அவரை பணியில் இருந்து நீக்கியதாக கூறியும், அலுவலகத்தில் சிலர் தரக்குறைவாக பேசுவதாகவும் தெரிவித்து,' துாய்மை பணியாளர்கள் தரையில் அமர்ந்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், செயல் அலுவலர் (பொ) செந்தில்குமார் முன்னிலையில் பேச்சு நடந்தது.
அதில், 'துாய்மை பணியாளரை நீக்க எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை; போராட்டங்களை தவிர்த்து இனி இது போன்ற புகார்களை நேரடியாக தெரிவிக்க வேண்டும்,' என, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுறுத்தினார். இதனால், 3 மணி நேரத்திற்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.

