/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிகரிக்கும் மோசடி: நடவடிக்கை எடுக்க உறுதி
/
அதிகரிக்கும் மோசடி: நடவடிக்கை எடுக்க உறுதி
ADDED : செப் 25, 2024 09:05 PM
பந்தலுார் : '-பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில், அரசு நலத்திட்டங்களை பெற்று தருவதாக கூறி, மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தாசில்தார் கூறினார்.
மாநிலத்தின் எல்லையோர பகுதியில் பந்தலுார் பகுதி உள்ளது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் இந்த பகுதியில், அரசின் நலத்திட்டங்கள் குறித்து, பெரும்பாலான மக்களுக்கு முழுமையான தகவல் தெரிவதில்லை.
மோசடி நபர்கள் வலம்
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அரசின் நலத்திட்டங்களை பெற்று தருவதாக கூறி, பல்வேறு இடங்களிலும் பொதுமக்களிடமிருந்து ஆவண நகல்கள் பெறப்படுவது அதிகரித்து வருகிறது. பெதுவாக, அரசின் நல வாரியத்தின் கீழ் பெயர்கள் பதிவு செய்ய, அரசின் அனுமதி பெற்ற பதிவு சேவை மையங்கள் உள்ளன.
ஆனால், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நல வாரியத்தின் கீழ், பெயர் பதிவு செய்வதாக கூறியும், பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கப்படுவதாக கூறியும், பொதுமக்களிடமிருந்து ரேஷன் கார்டு மற்றும் ஆதார் நகல்கள் பெறப்பட்டு, தலா, 500 முதல் 700 ரூபாய் வரை சிலர் பணம் வசூலிக்கின்றனர். அரசின் திட்டங்களை எப்படியாவது பெற வேண்டும் எனும் நோக்கில், பொதுமக்களும் இது குறித்து விசாரிக்காமல் ஆவணங்களின் நகல்களையும், பணத்தையும் வழங்குகின்றனர்.
மாவட்ட நிர்வாகத்துக்கு மனு
மாவட்ட நிர்வாகத்துக்கு சில தன்னார்வ அமைப்புகள் புகார் மனு அனுப்பி உள்ளனர்.
தன்னார்வ அமைப்பினர் கூறுகையில்,'அரசின் திட்டங்களை பெற்று தருவாக கூறி பல மோசடி நபர்கள், மக்களை ஏமாற்றி வருவதால், மாவட்ட நிர்வாகம் நலவாரிய அட்டை பெறுவதற்கான இ-சேவை மையங்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட நபர்களின் தொலைபேசி எண்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்கள் நடந்த வேண்டும்,' என்றனர்.
பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், '' இது போன்று வரும் மோசடி நபர்கள் குறித்து, போட்டோ மற்றும் ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தால், அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் அரசின் திட்டங்களை பெற அரசின் அங்கீகாரம் பெற்ற இ-சேவை மையங்களை மட்டும் அணுக வேண்டும்,''என்றார்.