‘புரிந்து படித்தால் அறிவியலும் கணக்கும் எளிது’: நாசா விஞ்ஞானி அறிவுரை
‘புரிந்து படித்தால் அறிவியலும் கணக்கும் எளிது’: நாசா விஞ்ஞானி அறிவுரை
UPDATED : அக் 11, 2026 04:48 PM
ADDED : அக் 11, 2026 04:46 PM
கூடலூர்: 'புரிந்து படித்தால் அறிவியலும், கணக்கும் எளிதாக இருக்கும்' என, கூடலூரில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் நாசா விஞ்ஞானி மனோகர் தெரிவித்தார்.
கூடலூர் அரசு கல்லூரியில், அறிவியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான வினாடி - வினா போட்டி மற்றும் அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, அரசு கல்லூரி அறிவியல் துறை தலைவர் அர்ஜுனன் தலைமை வகித்தார். விழாவில் தமிழகத்தை சேர்ந்த நாசா விஞ்ஞானி மனோகர் பங்கேற்று பேசுகையில் 'பருவநிலை மாற்றம் என்பது சில ஆண்டுகளில் மட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம். அதன் தரவுகளை ஆய்வு செய்ய வேண்டும். வெப்ப சலனம் மாறுபடும்போது காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. சூரியன் வெடிப்பு, சூரிய சூறாவளி எப்படி உண்டாகின்றது, சூரியன் ஒளி பூமி வரை எப்படி வருகிறது, அதன் வேகம் குறித்து, ஆராய்ச்சி செய்துள்ளேன். இந்த ஆராய்ச்சி, செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு பயனுள்ளதாக உள்ளது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அறிவியல் முன்னேற்றத்தில் உள்ளது. அறிவியலும், கணக்கும் புரிந்து படித்தால் எளிதாக இருக்கும். இதன் பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சிகள் செய்ய முடியும். மாணவர்கள் பள்ளி படிக்கும் போதே இதற்கான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.' என்றார்.
வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நீலகிரி மாவட்ட தலைவர் சங்கர், பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
