/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெல் ஆராய்ச்சி மையத்தில் நாற்று நடவு பணி துவக்கம்
/
நெல் ஆராய்ச்சி மையத்தில் நாற்று நடவு பணி துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 09:24 PM

கூடலுார்; கூடலுார் புளியம்பாறையில் உள்ள, கோவை வேளாண் பல்கலைக்கழக நெல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மற்றும் விதை நெல்லுக்காக, நெல் நாற்றுகள் நடவு பணி துவங்கியது.
கூடலுார் பகுதியில், நடப்பு ஆண்டு வழக்கத்தை விட முன்னதாக பருவமழை துவங்கி பெய்து வருகிறது. நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வனவிலங்குகள் உணவு, குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது.
பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், மகிழ்ச்சியடைந்துள்ள நெல் விவசாயிகள், நெல் விவசாயம் பணிகளை துவங்கி உள்ளனர்.
கூடலுார் புளியம்பாறையில் செயல்பட்டு வரும் கோவை வேளாண் பல்கலைக்கழக, ஒட்டுநெல் ஆராய்ச்சி மையத்தில், விதை நெல் பயிரிடுவதற்கான வயல்களில் உழவு பணிகளை மேற்கொள்ளப்பட்டன. இம்மாதம் முதல் வாரத்தில், ஆராய்ச்சி நிலையில் உள்ள நெல் வகைகள், விவசாயிகளுக்கு, விதை நெல் வழங்குவதற்காக, கோவை வேளாண் பல்கலைக்கழக கண்டுபிடிக்கப்பட்ட, கோ-50 உள்ளிட்ட விதை நெல்லை பயிரிட்டனர். தொடர்ந்து, வயல்களில் உழவுப்பணிகளை மேற்கொண்டு, நெல் நாற்றுகளை நடவு செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் கூறுகையில், 'இங்குள்ள நெல் ஆராய்ச்சி மையத்தில், ஆராய்ச்சி நிலையுள்ள புதிய நெல் வகைகள், விதை நெல்லுக்கான விதைகள் இம்மாதம் துவக்கத்தில் விதைக்கப்பட்டது. தற்போது, நெல் நாற்றுகள் பறித்து, ஆய்வுக்காக நெல் நாற்றுகள் தனியாகவும், விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நெல் நாற்றுகள் தனியாகவும் நடவு செய்து வருகிறோம்,' என்றனர்.