/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு நாற்று விற்றால்... சட்டப்படி குற்றம்!: ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும்
/
உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு நாற்று விற்றால்... சட்டப்படி குற்றம்!: ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும்
உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு நாற்று விற்றால்... சட்டப்படி குற்றம்!: ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும்
உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு நாற்று விற்றால்... சட்டப்படி குற்றம்!: ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும்
ADDED : செப் 24, 2025 11:40 PM

ஊட்டி: 'நீலகிரியில் விதை உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு நாற்றுக்கள் விற்பனை செய்வது, ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கைப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக, 20 ஆயிரம் ஏக்கரில் மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. அந்தந்த பகுதிகளின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு மலை காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
மாதந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள், தங்களின் கோரிக்கையை முன் வைக்கின்றனர். அதிகாரிகள் ஆலோசனைக்கு பின் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி, குன்னுார் பகுதிகளில் உருளைகிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ் உட்பட பல்வேறு மலை காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.
மிதவெப்பமான காலநிலை நிலவும் கூடலுார், பந்தலுார் பகுதிகளில் காய்கறி, நறுமண பயிர்கள், தோட்டப்பயிர்கள் மற்றும் வாழை உட்பட பழ வகை, வாசனை திரவியங்கள் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இவைகள் விதை மற்றும் நாற்றுக்கள் பயன்படுத்தி சாகுபடி செய்யப்படுகிறது.
தரமான நாற்றுக்கள் விற்கணும் இந்நிலையில், சமீபத்தில் ஊட்டியில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில், விவசாய சங்க பிரதிநிதிகள் சிலர் பேசுகையில்,' காய்கறி மற்றும் வாழை நாற்றுக்கள் விற்பனை செய்வோர் தரமில்லாத நாற்றுகளை தவிர்த்து, தரமான நாற்றுகளை விற்பனை செய்து, நோய் பரவுதலை தடுக்கவும், விதை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, கலெக்டர் லட்சுமி பவ்யா பேசுகையில்,''கூடலுார் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு வாழை நாற்றுக்களை விற்பனை செய்வோர் அனைவரும் கட்டாயம் விதை உரிமம் எடுக்க வேண்டும்.
இங்குள்ள விவசாயிகளுக்கு தரமான நாற்றுக்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பிற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கும், பாக்கு, காபி மற்றும் மலை காய்கறி, பழ நாற்றுக்கள் விற்பனை செய்பவர்கள், விதை கட்டுப்பாட்டு ஆணையின்படி கட்டாயம் விதை உரிமம் எடுக்க வேண்டும்,'' என்றார்.
இதை தொடர்ந்து, மாவட்டத்தில், உரிமம் பெறாமல் விவசாயிகளுக்கு நாற்று விற்பவர்கள் குறித்த ஆய்வு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
உரிமை இல்லையேல் நடவடிக்கை விதை ஆய்வு துணை இயக்குனர் ரேவதி கூறுகையில், ''இனி வரும் நாட்களில் சமவெளி பகுதிகளில் இருந்து வாகனத்தில் நாற்றுக்கள் எடுத்து வரும்போது, சோதனை சாவடிகளில் போலீசார் உதவியுடன் ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்.
வாகனங்களில் வணிகர் வாயிலாக நாற்றுக்கள் கொண்டு வரும்போது, விதை உரிமம் கொள்முதல் பட்டியல் ஆகியவை காண்பிக்கப்பட்டால் மட்டுமே மாவட்டத்துகுள் அனுமதிக்கப்படுவர். நீல கிரியில் இனிவரும் நாட்களில் வாழை, பாக்கு, பழ செடிகள், மலை காய்கறி உள்ளிட்ட பயிர்களின் நாற்றுக்களை விற்பனை செய்ய, ஊட்டியில் உள்ள விதை ஆய்வாளரை வணிகர்கள் நேரடியாக அணுகலாம்.
விபரங்களுக்கு, 8105549018 எண்ணில் தொடர்பு கொண்டு விதை உரிமம் எடுத்து பயன்பெறலாம். விதை உரிமம் எடுக்காமல் விவசாயிகளுக்கு நாற்றுக்கள் விற்பனை செய்வது விதை சட்டத்தின்படி குற்றமாகும்.
விவசாயிகளுக்கு தரமான நாற்றுக்களை உரிய விற்பனை ரசீது வழங்கி விற்பனை செய்ய வேண்டும். உரிமம் பெறாமல் நாற்று விற்றால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.