/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் குழாயை சேதப்படுத்திய காட்டு யானையால் அதிர்ச்சி
/
குடிநீர் குழாயை சேதப்படுத்திய காட்டு யானையால் அதிர்ச்சி
குடிநீர் குழாயை சேதப்படுத்திய காட்டு யானையால் அதிர்ச்சி
குடிநீர் குழாயை சேதப்படுத்திய காட்டு யானையால் அதிர்ச்சி
ADDED : நவ 26, 2024 10:12 PM

கூடலுார்; கூடலுார் புளியம்பாறை அரசு பள்ளியில், நுழைந்த காட்டு யானை குடிநீர் குழாயை சேதப்படுத்திய சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலுார் புளியாம்பாறை அரசு உயர் நிலைப் பள்ளியில், பழங்குடியினர் உள்ளிட்ட, 224 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
பள்ளிக்குள் வெளி நபர்கள் வருவதை தடுக்கவும், இரவில் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் நுழைவதை தடுக்கவும் பள்ளியை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்க பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அதற்கான நடவடிக்கை இல்லை. இதனால், காட்டு யானைகள் இரவில் பள்ளி வளாகத்திற்கு வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், இரவில் பள்ளி வளாகத்தில் நுழைந்த காட்டு யானை, குடிநீர் குழாயை சேதப்படுத்தி சென்றது. பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், வளாகத்தை ஆய்வு செய்தபோது குழாயை சேதப்படுத்தியது தெரிய வந்தது. தகவல் அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, பள்ளி மேலாண்மை குழுவினர், சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைத்தனர்.
பெற்றோர் கூறுகையில், 'இரவில் இப்பகுதிக்கு வரும் யானை அடிக்கடி பள்ளி வளாகத்திற்கு நுழைவது வாடிக்கையாக உள்ளது. காட்டு யானை ஏற்கனவே, ஒருமுறை சத்துணவு கூடத்தையும், தற்போது குடிநீர் குழாயும் சேதப்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர வாய்ப்புள்ளது. இதனை தடுக்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பள்ளியை சுற்றி சுவர் அமைக்க வேண்டும்,' என்றனர்.