/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரத்தில் கடையடைப்பு! ஆளும் கட்சி மீது உள்ளூர் வியாபாரிகள் கடும் அதிருப்தி
/
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரத்தில் கடையடைப்பு! ஆளும் கட்சி மீது உள்ளூர் வியாபாரிகள் கடும் அதிருப்தி
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரத்தில் கடையடைப்பு! ஆளும் கட்சி மீது உள்ளூர் வியாபாரிகள் கடும் அதிருப்தி
மார்க்கெட் கடைகள் இடித்து கட்டும் விவகாரத்தில் கடையடைப்பு! ஆளும் கட்சி மீது உள்ளூர் வியாபாரிகள் கடும் அதிருப்தி
ADDED : ஜூன் 15, 2025 09:43 PM

குன்னுார்; குன்னுார் மார்க்கெட் கடைகள் இடிப்பு விவகாரத்தில், நகராட்சி 'நோட்டீஸ்' வழங்கியதால், நேற்று முழு கடையடைப்பு நடத்தப்பட்டது.
குன்னுார் மார்க்கெட்டில், 800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடைகளை இடித்து, புதிதாக கட்ட அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, உழவர் சந்தை அருகே மாற்று கடைகள் அமைக்கப்பட்டன. 'உழவர் சந்தைக்கு கடைகளை மாற்றினால் மக்கள் பொருட்கள் வாங்க வர வாய்ப்பில்லை,' என, வியாபாரிகள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த அதிகாரிகள் நடத்திய கூட்டத்தை வியாபாரிகள் புறக்கணித்து வெளியேறினர்.
324 கடைகளுக்கு 'நோட்டீஸ்'
இந்நிலையில், 15 நாட்களில் கடைகளை காலி செய்ய முதற்கட்டமாக, 324 கடைகளுக்கு கடந்த, 13ம் தேதியில் இருந்து 'நோட்டீஸ்' வழங்கும் பணியை துவங்கியதால், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
வியாபாரிகளுக்கு ஆதரவாக முதல் கட்டமாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் போராட்டத்தில் இறங்கினர். அதே நேரத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள்; கட்சியினர் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அனைத்து வியாபாரிகளும் கடைகளை அடைத்து கூட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து, நேற்று மார்க்கெட்டில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. முழு ஆதரவு தெரிவித்த, 800 கடைகள் அடைக்கப்பட்டதால் பொருட்களை வாங்க வந்த, எஸ்டேட் வட மாநில தொழிலாளர்கள் உட்பட பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வியாபாரிகளின் நலன் காக்க வேண்டும்
நகராட்சி வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த ஆட்சியின் போது மார்க்கெட் வியாபாரிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்து, துண்டு பிரசுரம் வழங்கி தி.மு.க., ஓட்டு சேகரித்தது. ஆனால், வாடகை பிரச்னைக்கு தீர்வு காணாமல், வாடகையை உயர்த்தி, நிலுவை தொகையை வசூல் செய்தனர். பலரும் கடன்கள் வாங்கி இதனை செலுத்திய நிலையில், நகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கடைகளை காலி செய்ய கூடுவதால், நாங்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. இதனால், போராட்டம் நடத்துவதற்கு தள்ளப்பட்டோம். கடை இடிப்பை தடுக்க, நகராட்சியின், 30 கவுன்சிலர்களுக்கும் வாய்ப்பு இருந்தும், இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி தலைவர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் ஒன்றிணைந்து வியாபாரிகளின் நலன் காக்க முன்வர வேண்டும்,' என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,'அரசின் உத்தரவுபடி, 'பார்க்கிங்' வசதியுடன் மார்க்கெட் கட்டடங்களை, 42 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு தற்காலிக கடையும் அமைக்கப்படும். வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றனர்.