/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சில்லஹள்ளா நீரேற்று மின்திட்டம்; படுகர் நல சங்கம் எதிர்ப்பு
/
சில்லஹள்ளா நீரேற்று மின்திட்டம்; படுகர் நல சங்கம் எதிர்ப்பு
சில்லஹள்ளா நீரேற்று மின்திட்டம்; படுகர் நல சங்கம் எதிர்ப்பு
சில்லஹள்ளா நீரேற்று மின்திட்டம்; படுகர் நல சங்கம் எதிர்ப்பு
ADDED : மார் 16, 2025 11:44 PM
கோத்தகிரி; 'நாக்கு பெட்டா' படுகர் நலசங்கம் மாவட்ட தலைவர் பாபு கலெக்டருக்கு அனுப்பிய மனு: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் நிலையங்கள் மூலம், 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், சில்லஹள்ளா நீர் மின் திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் அமலுக்கு வரும் பட்சத்தில், 25 குக்கிராமங்களை சேர்ந்த, 10 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதுடன், 600 ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடம் கையகப்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. தேயிலை மற்றும் காய்கறி பயிர்களுக்கு விலை இல்லாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.
ஒரு புறம் கமிட்டி அமைத்து பசுந்தேயிலைக்கு விலை பெற்று தர நடவடிக்கை நடவடிக்கை எடுப்பதாக கூறும் அரசு, மறுபுறம் விவசாயிகளிடம் இருந்து, தேயிலை தோட்டத்தை இத்திட்டத்திற்கு கையகப்படுத்த முயற்சி மேற்கொள்வது அதிர்ச்சியாக உள்ளது. மாநில அரசு, 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை கைவிட்டு, முக்கூர்த்தி, பார்சன் வேலி, அப்பர் பவானி மற்றும் எமரால்டு உள்ளிட்ட மின் நிலையங்களை மேம்படுத்தி கூடுதல் மின்சாரம் தயாரிக்கலாம்.
இங்கு உற்பத்தி செய்யப்படும், 833 மெகாவாட் மின்சாரத்தில், 70 மெகாவாட் மின்சாரம் மட்டும் நீலகிரிக்கு பயன்படுத்தப்படுகிறது. தவிர, மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீர், சமவெளி பகுதி மக்களின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், பாதுகாக்கப்பட்ட பகுதி. வன விலங்குகள் நிறைந்து வாழ்கின்றன. பருவ மாற்றம் காரணமாக, இயற்கை சீற்றம் ஏற்படுவதால், திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இல்லாத பட்சத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.