/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கொப்புள நோயின் தாக்கம் சிறு விவசாயிகள் கவலை
/
கொப்புள நோயின் தாக்கம் சிறு விவசாயிகள் கவலை
ADDED : டிச 23, 2024 05:29 AM

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய விவசாய தொழிலாக உள்ளது. இத்தொழிலை சிறு, குறு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். நடப்பாண்டு, அதிக மழை பெய்துள்ள நிலையில், உரமிட்டு பராமரித்த தோட்டங்களில், மகசூல் அதிகரித்து வருகிறது.
தற்போது, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 24 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இந்த விலை, விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை என்றாலும், ஓரளவு ஆறுதல் அடைந்து தோட்டங்களை பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, குளிருடன் மேக மூட்டமான காலநிலை நிலவுகிறது. போதிய சூரிய வெளிச்சம் இல்லாத நிலையில், தேயிலை தோட்டங்களில் கொப்புள நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடரும் பட்சத்தில், பசுந்தேயிலை அரும்புகள் துளிர் விடாமல் வீணாகி, மகசூல் குறைய வாய்ப்புள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,' தேயிலை விவசாயத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்த போதும், கடன் வாங்கி இதனை மேற்கொண்டு வருகிறோம். தொழிற்சாலைகளில் உரிய விலை கூட கிடைப்பதில்லை. இந்நிலையில், தற்போது நிலவும் காலநிலையால், பல தோட்டங்களில் கொப்புள நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.