/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கம்மாத்தி பாசன நீர் கால்வாயில் தேங்கிய மண்; தண்ணீர் செல்வதில் பாதிப்பு
/
கம்மாத்தி பாசன நீர் கால்வாயில் தேங்கிய மண்; தண்ணீர் செல்வதில் பாதிப்பு
கம்மாத்தி பாசன நீர் கால்வாயில் தேங்கிய மண்; தண்ணீர் செல்வதில் பாதிப்பு
கம்மாத்தி பாசன நீர் கால்வாயில் தேங்கிய மண்; தண்ணீர் செல்வதில் பாதிப்பு
ADDED : செப் 20, 2024 09:56 PM

கூடலுார், : 'கூடலுார், ஸ்ரீமதுரை பகுதியில் மண் மூடி காணப்படும் கம்மாத்தி நீர்ப்பாசன கால்வாய் சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார், ஸ்ரீமதுரை ஊராட்சி மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். வயல்களில் கோடையில் காய்கறிகளும், பருவமழை காலத்தில் நெல் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். கம்மாத்தி, சேமுண்டி, கீச்சலுார், புத்துார்வயல் விவசாயிகள் கோடைகாலத்தில், காய்கறிக்கு போதிய பாசன வசதியின்றி சிரமப்பட்டு வந்தனர்.
இதற்கு தீர்வாக, கம்மாத்தி பகுதியில், கம்மாத்தி ஆற்றின் குறுக்கே சிறிய தடுப்பணை அமைத்து, அங்கிருந்து நீர்பாசன கால்வாய் மூலம், விவசாய நிலங்களுக்கு தடுப்பணை நீரை எடுத்து சென்று, விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். நீர்வளத்துறை சார்பில் நிதி ஒதுக்கி, மண் பாசன கால்வாயை, படிப்படியாக சிமென்ட் கால்வாயாக மாற்றி வருகின்றனர். தொடர்ந்து பராமரிப்பு பணிகள் இல்லாததால், நீர்ப்பாசன கால்வாயில் பகுதிகள் முப்புதர்கள் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றது.
இந்நிலையில், நடப்பாண்டு பருவமழையை தொடர்ந்து, கம்மாத்தி ஆற்றில் ஏற்பட்ட மழை வெள்ளம், பாசன கால்வாய் வழியாக வெளியேறியது. இதனால், பாசன கால்வாயில் பல இடங்களில், மண் தேங்கி பாசனத்திற்கான நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. பருவமழை குறைந்து வரும் நிலையில், நெற் பயிர்களுக்கு நீர் பாசன கால்வாயை மூலம் கிடைக்கும் பாசன நீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால், மழை வெள்ளத்தின் போது அடித்து வரப்பட்ட மண், பாசன கால்வாயில் பல இடங்களில் தேங்கி, விவசாய நிலங்களுக்கு பாசன நீர் செல்வதில் இடையூறாக உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதியில், பருவமழை குறைந்து வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் பயிர்களுக்கு, நீர்ப்பாசன கால்வாய் நீரை நம்பி உள்ளோம். ஆனால், கால்வாயில் ஆங்காங்கு மண் தேங்கியுள்ளதால் அதன் வழியாக பாசன நீர் வருவது தடையாக உள்ளது.
எனவே, நீர்ப்பாசன கால்வாயை சீரமைத்து தடையின்றி நெற் பயிர்களுக்கும், தொடர்ந்து கோடையில் காய்கறிகளுக்கு தடையின்றி பாசன நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.