/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடு
/
மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க சிறப்பு ஏற்பாடு
ADDED : டிச 19, 2025 05:24 AM
ஊட்டி: 'நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் ஓட்டளிக்க தேவையான சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவடைந்துள்ளது. ஓட்டுச்சாவடிகள், ஓட்டு என்னும் மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணி நடந்து வருகிறது.
மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில், 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து, கூடுதலாக ஓட்டுச்சாவடிகள் அமைக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது, மாவட்டத்தில், 690 ஓட்டுச்சாவடிகள் இருந்த நிலையில், 736 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி ஓட்டளிக்க ஏதுவாக, மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், 'மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் ஓட்டளிக்க சாய்வு தளம் வசதியை உறுதி செய்ய வேண்டும்; சாய்வு தள வசதி இல்லாத ஓட்டுச்சாவடிகளை கண்டறிந்து, அங்கு அதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்; தவிர, குடிநீர் வசதி, நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலி, ஓட்டுச்சாவடிகளுக்கு மாற்று திறனாளிகளை அழைத்துச் செல்ல தன்னார்வலர்கள் நியமிப்பதுடன், அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்க வரும் பட்சத்தில், அவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த வேண்டும்.
வரிசையில் வாக்காளர்கள் காத்திருக்கும் பட்சத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை ஓட்டளிக்க செய்ய வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என. அறிவுறுத்தப்பட்டது. அதில், டி.ஆர்.ஓ., நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

