ADDED : செப் 23, 2024 10:28 PM

ஊட்டி : ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், 'துாய்மையே சேவை-2024' பிரசாரத்தின் ஒரு பகுதியாக, துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மாநிலத்தில், 'துாய் மையே சேவை 2024' பிரசாரம் கடந்த, 17ம் தேதி துவங்கி, அக்., 2ம் தேதி வரை நடக்கிறது. இந்நிலையில், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 13 ஊராட்சிகளில், 250 துாய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யா, முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
மாவட்டத்தை சுத்தமாகவும், துாய்மையாகவும் வைப்பதில், துாய்மை பணியாளர்களின் பங்கு முதன்மையாக உள்ளது. அவர்களது உடல் நலத்தையும் சுகாதாரமாக வைத்து கொள்வதற்காகவே, இந்த முகாம் நடத்தப்படுகிறது.
முகாமில், ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை; கோவை அபிராமி மருத்துவமனை சார்பில், பொது மருத்துவம், ஆர்த்தோ மற்றும் இருதயம்; ஊட்டி ஐ பவுண்டேஷன் சார்பில், கண் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.
இம்முகாமில், பரிந்துரைக்கப்படுபவர்கள் அனைத்து வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். துாய்மை பணியாளர்கள் இம்முகாமை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, துாய்மை உறுதிமொழி எடுக்கப்பட்டது.
