ADDED : டிச 09, 2024 09:37 PM

பந்தலுார்; பந்தலுார் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், நெல்லியாளம் நகராட்சி துப்புரவு பணியாளர்கள், அத்திக்குன்னா, மேங்கோரேஞ்ச் எஸ்டேட் துப்புரவு பணியாளர்களுக்கு, நகராட்சி மற்றும் விநாயகா மருத்துவமனை இணைந்து சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
குடிநீர் குழாய் பொருத்துனர் அர்ஜூணன் வரவேற்றார். கமிஷனர் முனியப்பன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், 'மருத்துவ முகாமின் பயன்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் துாய்மையாக இருக்க வேண்டியதன் அவசியம்,' குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை மற்றும் பொது மருத்துவம், எலும்பு, மனநல ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், டாக்டர்கள் சுமாவிஷ்ணு, நிதின், சுகாதார மேற்பார்வையாளர் ராமலிங்கம், சுற்றுச்சூழல் மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், காந்தி சேவா மைய அமைப்பாளர் நவ்ஷாத், வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். துப்புரவு ஆய்வாளர் அறிவழகன் நன்றி கூறினார்.
