/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் நிலத்தில் விளையாட்டு மையம்; கேரளா கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம்
/
கோவில் நிலத்தில் விளையாட்டு மையம்; கேரளா கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம்
கோவில் நிலத்தில் விளையாட்டு மையம்; கேரளா கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம்
கோவில் நிலத்தில் விளையாட்டு மையம்; கேரளா கிரிக்கெட் சங்கம் ஒப்பந்தம்
ADDED : டிச 03, 2024 05:54 AM
பாலக்காடு; சாத்தனன் குளங்கரை பகவதி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான, 21 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மையம் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கேரள கிரிக்கெட் சங்க தலைவர் வினோத்குமார் கூறியதாவது:
கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அதிநவீன வசதியுடன் கூடிய மைதானம் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் ஒரு பகுதியாக, பாலக்காட்டில் புதிய திட்டம் துவங்கப்படுகிறது.
சாத்தனன் குளங்கரை பகவதி அம்மன் கோவில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தை 33 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து விளையாட்டு மையம் அமைக்கப்படுகிறது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
விளையாட்டு மையம் அமைக்க, 30 கோடி ரூபாய் செலவு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் வரும், ஜன., மாதம் துவங்குகிறது.
இந்த திட்டத்தில் இரண்டு கிரிக்கெட் மைதானம், பிளட் லைட், கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் தவிர மற்ற விளையாட்டுகளுக்கான வசதியும் இருக்கும்.
முதல் கட்ட கட்டுமான பணிகள், 2026க்குள்ளும்; இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள், 2027 ஏப்ரல் மாதத்திற்குள் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
மலபார் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் முரளி கூறியதாவது:
திட்டத்தின் வாயிலாக கோவிலுக்கு, 10 லட்சம் ரூபாய் பாதுகாப்பு வைப்பு தொகையும், ஒவ்வொரு ஆண்டும், 21.35 லட்சம் ரூபாய் வருவாயும் கிடைக்கும்.
திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கவும் ஒப்பந்தத்தில் நிபந்தனை உள்ளது.
கோவில் மற்றும் சங்கத்தின் பெயரில் விளையாட்டு மையம் கட்டப்படுகிறது. கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், முதல்வர் பினராயி விஜயனுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக தான் இந்த திட்டம் சாத்தியமானது. இவ்வாறு, கூறினார்.