ADDED : மார் 12, 2024 01:08 AM

கூடலுார்:கூடலுார் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தேயிலை செடிகளை பாதுகாக்க, 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
கூடலுார், பந்தலுார் பகுதியில் நடப்பு ஆண்டு துவக்கம் முதல் மழை ஏமாற்றி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வனப்பகுதியை தொடர்ந்து, தேயிலை செடிகளும் வறட்சியில் பாதிக்க துவங்கி உள்ளது.
அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள், சிறு விவசாயிகளின் தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டு, வருவாய் இழப்பு ஏற்படுவதால் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தேயிலை செடிகளை பாதுகாக்க, தேயிலை தோட்டங்கள் 'ஸ்பிரிங்ளர்' மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியை மேற்கொண்டு உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'நடப்பாண்டு, தொடர்ந்து மழை ஏமாற்றி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து, பசுந்தேயிலை மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க, தினமும் இருமுறை தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். இவையும் முழுமையான தீர்வாக இல்லை. கோடை மழை வந்தால் மட்டுமே இந்த பாதிப்பில் இருந்து தப்ப முடியும்,' என்றனர்.
