/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முடங்கியது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முடங்கியது
/
முடங்கியது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முடங்கியது
ADDED : பிப் 08, 2024 10:34 PM

அன்னுார், -அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முடங்கி கிடப்பதால், தமிழக அரசு மீது திட்ட ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், பருவமழை குறைவால், பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறின. ஏராளமான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வேலையில்லாமல், கோவை, திருப்பூர் நகரங்களை நோக்கி வேலைக்கு சென்றனர். கால்நடை வளர்ப்பு குறைந்தது.
சோதனை ஓட்டம்
இதையடுத்து, கொங்கு மண்டல மக்களின், 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 1,942 கோடி ரூபாயில் துவக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 242 குளம், குட்டைகள் உள்பட திருப்பூர், ஈரோடு என மொத்தம் 1045 குளம் குட்டைகளில் நீர் நிரப்பும் வகையில் திட்ட பணிகள் துவங்கின.
இதில் கோவை மாவட்டத்தில் அன்னுார் அருகே குன்னத்தூராம் பாளையத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் ஐந்து இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார்கள் பொருத்தப்பட்டன.அனைத்து குளம் குட்டைகளிலும் நீர் வெளியேறுவதை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஓ.எம்.எஸ்., என்னும் கருவி நிறுவப்பட்டது.
இதைத்தொடர்ந்து 2023 பிப்ரவரியில் சோதனையோட்டம் துவங்கியது. மார்ச் மாதம் அன்னுார் குளத்திலும் சோதனையோட்டம் நடத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் வையம்பாளையம் வந்த அமைச்சர் முத்துசாமி, பவானி ஆற்றில் தண்ணீர் இல்லை. எனவே இத்திட்டம் இப்போதைக்கு துவக்கப்படாது, என கூறியுள்ளார்.
அதிர்ச்சி
இது அத்திக்கடவு -அவிநாசி திட்ட ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் செங்காளிபாளையம் நடராஜன் கூறியதாவது :
அத்திக்கடவு -அவிநாசி திட்டம் 24 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. 2021 டிசம்பரில் முடிய வேண்டிய இப்பணி அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் முடிந்தும் இதுவரை முடியவில்லை. தி.மு.க., அரசு ஆட்சி பொறுப்பேற்ற போது 85 சதவீத பணிகள் முடிவடைந்து இருந்தன. மீதி பணிகளை முடிப்பதிலும், குழாய் பதிப்பதற்காக விவசாயிகளின் நிலத்துக்கு பயன்பாட்டு தொகை தருவதிலும் நிலம் கையகப்படுத்துவதிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கடும் மெத்தனம் நிலவியது.
மேலும் சோதனையோட்டம் நடத்தும் போது குழாய் உடைப்பு ஏற்பட்டால் விரைவில் சரி செய்யவில்லை. இன்னும் 30 குளங்களில் சோதனை ஓட்டமே நடத்தப்படவில்லை. இது மிகுந்த வேதனை தருகிறது. இந்த சூழ்நிலையில் ஆற்றில் தண்ணீர் குறைவு என்று கூறுகின்றனர்.
ஆனால் ஆற்றில் போதுமான தண்ணீர் செல்கிறது. தற்போது உள்ள தண்ணீரை வைத்து தாராளமாக திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.
மெத்தனம்
ஆனால் அரசு தொடர்ந்து இத்திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் மெத்தனமாக உள்ளது. ஏற்கனவே 1100 குளம், குட்டைகள் இந்த திட்டத்தில் விடுபட்டுள்ளன. விடுபட்டுள்ள குளங்களுக்காக அத்திக்கடவு இரண்டாம் திட்டத்திற்கு ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டும், இரண்டரை ஆண்டுக்கு மேலாகிவிட்டது.
அது குறித்தும் எந்த தகவலும் இல்லை. 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மொட்டை அடித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி இத்திட்டத்தை கொண்டு வந்தோம். ஆனால் செயல்பாட்டுக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு நடராஜன் தெரிவித்தார்

