/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் நவீன சோலார் கேமரா! அனைத்து நிகழ்வையும் கண்காணிக்க அதிரடி
/
தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் நவீன சோலார் கேமரா! அனைத்து நிகழ்வையும் கண்காணிக்க அதிரடி
தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் நவீன சோலார் கேமரா! அனைத்து நிகழ்வையும் கண்காணிக்க அதிரடி
தேர்தல் பறக்கும் படை வாகனத்தில் நவீன சோலார் கேமரா! அனைத்து நிகழ்வையும் கண்காணிக்க அதிரடி
ADDED : மார் 20, 2024 10:27 PM

பெ.நா.பாளையம் : லோக்சபா தேர்தல் நன்னடத்தை விதியை நடைமுறைப்படுத்தும் பறக்கும் படை வாகனத்தில் அதிநவீன சோலார் பேனலுடன், 360 டிகிரி சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை அமல்படுத்த பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ குழு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
24 மணி நேரம்
பறக்கும் படை குழுவில் ஒரு மாஜிஸ்திரேட் நிலையில் வருவாய்த்துறை அலுவலர் தலைமையில் காவல்துறை ஆய்வாளர், ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் ஒரு வீடியோகிராபர் இருப்பர்.
ஒரு சட்டசபை தொகுதிக்கு மூன்று குழுக்கள், அதாவது, 8 மணி நேரத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில், 24 மணி நேரமும் செயல்படதக்க வகையில் இக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான அனைத்து புகார்களையும் இக்குழு விசாரணை செய்யும். இக்குழுவின் அனைத்து நபர்களின் மொபைல் எண்கள், மாவட்ட தொலைபேசி தொடர்பு மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
கள்ளத்தனமாக பணம் எடுத்துச் செல்வதையும், மதுபானங்கள் விநியோகிக்க கொண்டு செல்வது உள்ளிட்ட வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்கும் விதமான அனைத்து நடவடிக்கைகளையும் இக்குழு கண்காணிக்கும்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகவோ, மதுபானங்கள் கொடுக்கப்படுவதாகவோ, இதர பரிசு பொருட்கள் கொடுப்பதாகவோ தகவல் பெறப்பட்டவுடன், இக்குழு தொடர்புடைய இடத்துக்கு சென்று விசாரணை செய்யும். சாட்சியங்களுடன் அதை கைப்பற்றும்.
இது குறித்தான புகாரை பறக்கும் படை குழு தலைவர், அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் செய்யலாம்.
360 டிகிரி கோணத்தில் சுழலும் கேமரா
இக்குழு சாட்சியங்களின் வாக்குமூலங்களை பெற்று, தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அனுப்பும். அனைத்து செயல்களும் வீடியோவாக பதிவு செய்யப்படும்.
கைப்பற்றப்பட்ட தொகையினை உரிய அலுவலர்களிடம் விரைவில் ஒப்படைக்கும். இக்குழு தினசரி தங்கள் பணியினை இரண்டு படிவங்களில் அறிக்கையாக தாக்கல் செய்யும்.
தற்போது நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலையொட்டி பறக்கும் படை வாகனத்தில், சோலார் பேனலுடன் கூடிய, 360 டிகிரி கோணத்தில் சுழலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகள் கொண்ட இக்கேமராவால் குறிப்பிட்ட பறக்கும் படை வாகனம் எங்கு உள்ளது, செயல்பாடுகள் என்ன, எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாவட்ட நிர்வாகத்தினர், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எளிதாக பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனலுடன் இயங்கும் கேமரா எத்தகைய கால சூழ்நிலையையும் தாக்கு பிடிக்கும் வல்லமை பெற்றது. அதாவது, மழை கடும் வெயில், குளிர், மேகமூட்டமான சூழ்நிலையையும் தாக்கு பிடிக்கும். தண்ணீர் புகாத 'வாட்டர் ரெசிஸ்டன்ஸ்' கொண்டது. இரவு நேரங்களில் தெளிவாக காணும் வசதி உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் அலுவலகத்தில் இருந்து லேப்டாப், டேப், மொபைல் போன் வாயிலாகவோ பறக்கும் படை வாகனத்தில் உள்ள சோலார் கேமராவை இயக்கி, அந்த குறிப்பிட்ட வாகனத்தை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெளிவாக பார்க்க முடியும்.
சுமார், 100 அடி தூரத்தில் நடக்கும் சம்பவங்களை எளிதாக பதிவு செய்யவும் அல்லது போட்டோவாகவும் எடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

