/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேலை நிறுத்தம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்
/
வேலை நிறுத்தம்: விவசாயிகள் சங்கம் கண்டனம்
ADDED : நவ 14, 2024 08:57 PM
கோத்தகிரி; கூட்டுறவு சங்க செயலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு, விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலசங்க தலைவர் தும்பூர் போஜன், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
மாவட்டத்தில் உள்ள சில கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற செல்லும் படிக்காத விவசாயிகளிடம், கடன் தொகையை குறிப்பிடாமல் கையொப்பம் பெறப்படுகிறது. கடன் தொகைக்கான ரசீது வழங்குவதில்லை. உரத்திற்காக பிடித்தம் செய்யப்படும் தொகை குறித்து, படிக்காத விவசாயிகளுக்கு தெரிவதில்லை.
தவிர, இரண்டு ஏக்கர் அனுபோக சான்று வழங்கும் விவசாயிகளுக்கு வெறும், 40 முதல் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. கடன் தொகையை புதுப்பிக்க அதிக வட்டி பெறப்படுகிறது.
தனியார் கம்யூட்டர் சென்டர்களில், சிட்டா நகலுக்கு, 20 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், கூட்டுறவு சங்கங்களில் சிட்டா நகல் எடுத்தால், 70 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பிற ஆவண செலவு என, விவசாயிகளிடமிருந்து, 500 முதல், 1,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உறுப்பினர்களை பாதிக்கும் போராட்டங்களை கண்டிக்கிறோம்.
இவ்வாறு, தும்பூர்போஜன் கூறியுள்ளார்.