/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின கிராமத்தில் நடந்த பொங்கல் விழா பெற்றோருடன் கொண்டாடி மகிழ்ந்த மாணவர்கள்

ADDED : ஜன 07, 2025 11:46 PM

பந்தலுார்,; பந்தலுார் அருகே, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பென்னை பழங்குடியின கிராமத்தில் பொங்கல் விழா நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பணியர், காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
மண்ணின் மைந்தர்களான இவர்கள், மலையாள மொழி பேசும் இந்து மக்கள் கொண்டாடும் ஓணம், விஷூ மற்றும் கதிர் அறுப்பு ஆகிய பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பந்தலுார் அருகே, முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பென்னை பழங்குடியின கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் பொங்கல் விழாவை கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். பொங்கல் வைக்கப்பட்டு, பூஜாரி கிருஷ்ணா பூஜை செய்தார். மாணவர்கள் சீருடையுடன் வந்து பெற்றோருடன் விழாவை சிறப்பித்தனர். பொங்கலை அனைவரும் உட்கொண்டனர்.
தலைமை ஆசிரியர் முருகேசன் கூறுகையில், ''பழங்குடியின மக்கள் பொதுவாகவே கூச்ச சுபாவம் உடையவர்கள். நேர்மையான பழக்கங்களை கொண்டுள்ள இவர்கள் மத்தியில், பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. இவர்களை மேலும் மகிழ்ச்சி படுத்தும் வகையில், பொங்கல் பண்டிகையை அந்த மக்களுடன் இணைந்து கொண்டாடினோம்,'' என்றார். நிகழ்ச்சியில், ஆசிரியர் ரோஸ்மேரி, ஊர் தலைவர் அப்பு, நிர்வாகி வாசு, பள்ளி மேலாண்மை குழு தலைவி பீனா உட்பட பலர் பங்கேற்றனர்.