/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூண்டு ஏலத்தில் திடீர் வீழ்ச்சி: நீலகிரி விவசாயிகள் 'அப்செட்'
/
பூண்டு ஏலத்தில் திடீர் வீழ்ச்சி: நீலகிரி விவசாயிகள் 'அப்செட்'
பூண்டு ஏலத்தில் திடீர் வீழ்ச்சி: நீலகிரி விவசாயிகள் 'அப்செட்'
பூண்டு ஏலத்தில் திடீர் வீழ்ச்சி: நீலகிரி விவசாயிகள் 'அப்செட்'
ADDED : செப் 26, 2025 09:06 PM
குன்னுார்: குன்னுாரில் நடந்த பூண்டு ஏலத்தில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், விளைவிக்கப்படும் ஊட்டி பூண்டு மேட்டுப்பாளையம் ஏல மையத்தில், வாரந்தோறும் ஞாயிறன்று ஏலம் விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், குன்னுார் எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏலம் விடப்படுகிறது.
கடந்த, 4வது ஏலத்தில் கிலோவுக்கு, 160 ரூபாய் வரை விலை கிடைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த, 5வது ஏலத்தில், குறைந்த பட்சமாக, 20 ரூபாய் முதல், அதிகபட்சமாக ஒரு கிலோ, 70 ரூபாய் வரை இருந்தது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக, விவசாயி விஸ்வநாதன் கூறுகையில், ''எடப்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை மையத்தில், 'இ-நாம் ஆப்' வாயிலாக மறைமுக ஏலம் நடத்தப்படுகிறது. இந்த வார மறைமுக ஏலத்தில், தலா, 45 கிலோ அடங்கிய, 400க்கும் மேற்பட்ட மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
மறைமுக ஏலத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஒரே மண்டியை சேர்ந்த இரு வியாபாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இந்த ஏலத்தில் சிறந்த பூண்டுகளைஅடிமட்ட விலைக்கு கிலோ, 70 ரூபாய்க்கு விலை கேட்டனர். இச்செயல், விவசாயிகளுக்கு மிகவும் மன சங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் ஊட்டி பூண்டுகளை விவசாயிகள் மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏலத்தை விவசாயிகளின் விருப்பப்படி பகிரங்க ஏளமாக மாற்றவும் வேண்டும்,'' என்றார்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை துணை இயக்குனர் கண்ணாமணி கூறுகையில், ''விதைகளுக்காக வட மாநில வர்த்தகர்கள் அதிகளவில் வாங்கி சென்றதால் ஏற்றம் கண்டது. மத்திய பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொடர் மழை காரணமாக, ஏற்கனவே கொண்டு சென்ற பூண்டு இறக்க முடியாமல் வைத்துள்ளதால், வியாபாரிகளும் பூண்டு வாங்க ஆர்வம் காட்டாததால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த ஏலத்திற்கு, 20 டன் வரை வந்தது. தேக்கமடைந்த பூண்டு, பலரும் எடுத்து சென்றனர். சிலர் மைய குடோனில் பாதுகாப்புடன் வைத்துள்ளனர்.
அதிகளவில் வியாபாரிகள் பங்கேற்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என்றார்.