ADDED : மார் 05, 2024 12:01 AM
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் பிரதமர் படம் வைக்க வேண்டும் என பா.ஜ., திடீரென நடத்திய போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
துடியலூர் அருகே குருடம் பாளையம் ஊராட்சி அலுவலகம் உள்ளது. இங்கு பிரதமர் நரேந்திர மோடி படம் வைக்க வேண்டும் என, நேற்று பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு மண்டல பா.ஜ., தலைவர் புவனேஸ்வரன், மாவட்ட செயலாளர் யோகேஷ், கவுன்சிலர் சாவித்திரி சக்திவேல் உள்ளிட்டோர் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் பிரதமர் போட்டோவுடன் அலுவலக வளாகத்துக்கு வந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த துடியலூர் போலீசார் பா.ஜ., நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி, உரிய அனுமதி பெற்று, போட்டோ வைத்துக் கொள்ளலாம் என, அறிவுரை வழங்கினர். பா.ஜ., நிர்வாகிகள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

