ADDED : ஏப் 02, 2026 05:00 AM

ஊட்டி: கோடை சீசனை முன்னிட்டு, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் சினிமா படபிடிப்புகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இதற்கு, சென்னையில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும், படப்பிடிப்பு நடத்த, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்காவில் , 50 ஆயிரம் ரூபாய்; தேயிலை பூங்காவில் , 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் , நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப் ., மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவதால், சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கும். இதன் காரணமாக, கோடை சீசனில் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை விதிப்பு நேற்று முதல் தாவரவியல் பூங்கா, குன்னுார் சிம்ஸ் பூங்கா உட்பட, 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் அமலுக்கு வந்தது.
தோட்டக்கலை இணை இயக்குனர் நவநீதா கூறுகையில்,''கோடை சீசனை முன்னிட்டு, சுற்றுலா பயணியர் இடையூறு இல்லாமல் இருக்கும் வகையில், ஏப்., மே மற்றும் ஜூன் ஆகிய மூன்று மாதங்கள் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
